கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு வணிகம், தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்டிருப்பது நாம் மட்டுமல்ல நமது நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயமும்தான். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விவசாயிகள் இரண்டு மடங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனெனில், அவர்கள் லட்சக்கணக்கான ஏக்கரில் கரும்பு, கோதுமை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். அவை தற்போது அறுவடைக்குத் தயாராகியுள்ளன. இந்நிலையில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்ய வேலை ஆள்கள், இயந்திரங்கள், சேமிப்புக் கிடங்கு இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து விவசாய வல்லுநர் அமோகாந்த் கூறுகையில், "தற்போது கோதுமை பயிர் அறுவடைக்குத் தயாராகியுள்ளது. ஆனால், வேலையாள்கள் கிடைக்கவில்லை. அறுவடை செய்ய இனியும் காலம் தாமதம் ஏற்பட்டால் பயிர்கள் சேதமாகிவிடும்.
அப்படி நடந்தால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக அறுவடை இயந்திரங்கள்கூட கிராமத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை" என்றார்.
இதைத் தொடர்ந்து பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ஹர்னம் வர்மா கூறுகையில், "கோதுமை, சனா, கடுகு, உருளைக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களின் அறுவடை ஏற்கனவே நடந்துவருகிறது. ஆனால், அறுவடையை பாதியில் நிறுத்திவிட்டால் நாசமாகிவிடும். எனவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு ஏதும் செய்யாவிட்டால் விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள்" என்றார்.