மும்பையின் சிவப்பு விளக்கு, கொல்கத்தாவின் சோனாகாச்சி போன்று வணிக முத்திரை இல்லையென்றாலும், அசாம் மாநிலம், சில்சார் ராதாமாதாப் பகுதியிலும், பாலியல் தொழிலாளர்களின் 200 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர்.
வாட்டும் வறுமை, வேறு வேலைவாய்ப்புகள் இல்லாத நிலைமை, இவர்களின் துயர் வாழ்வுக்கு காரணம். இவர்களின் இருட்டு வாழ்க்கை வெளியில் சொல்ல முடியாத துன்பங்களும், துயரங்களும் நிறைந்தது. அந்தத் துன்பத்தில் கிடைக்கும் பணத்தில், இவர்களின் வீட்டில் உலை கொதிக்கிறது.
அந்த உலை கொதிக்க வேண்டுமா இல்லை, இவர்களின் வயிறுப் பசியால் வாட வேண்டுமா என்பதை நிர்ணயிப்பதும், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணம்தான். ஆக.. அன்றாட வாழ்க்கை வாழ்வதே இவர்களுக்குப் போராட்டம். இதற்கிடையில், கரோனா வைரஸ் பீதியால், நாடு 21 நாள்கள் பூட்டப்பட்டுவிட்டன.
ஆனால், இந்த ஏழைகளின் வயிறோ பசியால் திறந்துகிடக்கிறது. ஆம்... கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து உண்ண உணவின்றியும் தங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமலும், இவர்கள் உயிர்வாழ போராடுகின்றனர். இச்சூழலில் தங்களுக்கு சிறிதளவேனும் ஆதரவு கிட்டுமா? என்பதே இவர்களின் ஏக்கமாக உள்ளது.
இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த ரீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், “நாங்கள் வசிக்கும் பகுதியை, நிதிஷா பல்லி என்பார்கள். அப்படியென்றால் தடை செய்யப்பட்ட பகுதி என்று பொருள். ஆனால், இங்கு வர யாருக்கும் தடையில்லை. நாங்கள் எங்கள் அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய போராடும் ஒரு சமூகம்.
'முடங்கிய நாடு, சுருங்கிய வயிறு'- பாலியல் தொழிலாளர்களின் கண்ணீர் கதை! 21 நாட்கள் பூட்டுதல் காரணமாக, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு அரிசி உள்ளிட்ட அடிப்படை உதவிகள் தொண்டு நிறுவனங்கள், காவலர்கள் வாயிலாக கிடைத்தது. ஆனால், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் எங்களை மருத்துவர்கள் பார்வையிட்டனர்.
நாங்கள் நன்றாக இருக்கிறோம். நாங்கள் இச்சூழலை சமாளித்து விடுவோம். ஆனாலும், அரிசி மற்றும் சில பருப்பு வகைகளை வழங்கியிருந்தால் உதவியாக இருக்கும்” என்றார்.
அப்போது அவரின் நா தழுதழுத்தது... முகமானது வாடிப்போய் காணப்பட்டது. இந்தப் பாலியல் தொழிலாளர்களின் தொழிலில் உள்ள சமூகக் களங்கம், இதுபோன்ற காலங்களில் தப்பிப்பிழைப்பது அவர்களுக்கு இன்னும் கடினமாக்குகிறது. வாழ்க்கை என்னும் நீல வானில் விடியாத வெள்ளியாக, தேயாத நிலவாகக் காட்சியளிக்கும் இந்தப் பொம்மைகளுக்கு தினம் தினம் நவராத்திரிதான். இந்தப் பொம்மைகளை தொங்கவும் விடலாம், தூக்கியும் நிறுத்தலாம்.
இது ஏளனக் கவிதை அல்ல. அப்பெண்களின் கண்ணீர் வாழ்க்கை!