அஸாம் மாநில மக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு 2019 ஆகஸ்ட்டில் வெளியானது. தற்போது அதன் இறுதிப்பட்டியல் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான 'www.nrcassam.nic.in' இல் பதிவேற்றப்பட்டுள்ளது.
இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக இதுபற்றிய தரவுகள் கிடைக்கவில்லை. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இப்பிரச்னை ஒன்று அல்லது இரண்டு நாள்களில் சரியாகும் என நம்பப்படுகிறது. இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து மாநில எதிர்கட்சித் தலைவர் டெபப்ரதா சாய்கியா, இந்திய பொதுபதிவாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்த விஷயத்தை அவசரமாக ஆராயுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அவர், “ஆன்லைன் தரவு ஏன் திடீரென மறைந்து போக வேண்டும் என்பது ஒரு மர்மமாகும்.
குறிப்பாக என்.ஆர்.சி ஆணையம் செயல்முறை கூட ஆரம்பிக்கப்படவில்லை. எனவே, சந்தேகிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் நீக்கப்பட்டுள்ள 19 லட்சத்த 6 ஆயிரத்து 657 நபர்களைத் தவிர்த்து இறுதி என்.ஆர்.சி வெளியிடப்பட்டது. மூன்று கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 661 விண்ணப்பதாரர்களில் மொத்தம் மூன்று கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து நான்கு பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.