அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருவதால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
இதன் காரணமாக பாரக் பள்ளத்தாக்கு பகுதிகளான ஹைலகண்டி, கரிம்கஞ்ச், கச்சார் ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஹைலகண்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேரும், கரிம்கஞ்சில் ஆறு பேரும் உயிரிழந்து உள்ளனர். கரிம்பூர் என்ற நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண், மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. மாநிலப் பேரிடர் மீட்புப் பிரிவினர் நிலச்சரிவில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
நிலச்சரிவில் சிக்கிய இரண்டு பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் சர்பானந்த சோனவால் இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா அச்சம் ஒருபுறம்; வெள்ளம் அச்சம் மறுபுறம் - வேதனையில் அஸ்ஸாம் மக்கள்