அஸ்ஸாமில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமாராக இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அஸ்ஸாம் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த அலுவலர் கூறும்போது, ”16 மாவட்டங்களில் 706 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார்.
இதுவரையில் 142 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி 21 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனிடையே, பிரம்மபுத்திரா, டிகோவ், ஜியாபாரலி, தன்சிரி நதியில் தண்ணீர் அபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்தோடுகிறது. இதனால் திப்ரூகர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகளவில் பிரசித்திப்பெற்ற தேசிய காசிரங்கா பூங்காவும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஏறக்குறைய 12 ஆயிரம் ஹெக்டர்ஸ் நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளதால் அங்குள்ள விலங்குகளை வேறிடத்திற்கு மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதைபோலவே, போபிடோரா வனவிலங்கு சரணாலயமும் வெள்ளத்தில் மூழ்கியதால் 100 காண்டாமிருகங்களும், 1,500 காட்டெருமைகளும், ஆயிரக்கணக்கான பன்றிகளும் உயரமான இடத்திற்கு மாற்றப்பட்டன.
இதையும் படிங்க:ஆந்திர தொழிற்சாலையில் விஷவாயு கசிவு - பொது மேலாளர் உயிரிழப்பு