அஸ்ஸாம் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது. மாநிலத்திலுள்ள 33 மாவட்டத்தில் 27 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்குள்ளாகியுள்ளன. குறிப்பாக கோல்பாரா மாவட்டம்தான் அதிகப்படியான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அம்மாவட்டத்தில் மட்டும் 4.7 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பார்பேட்டாவில் 4.24 லட்சம் மக்களும், மோரிகான் மாவட்டத்தில் 4.24 லட்சம் மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.
வெள்ள பாதிப்புள்ள மாவட்டத்தில் அம்மாநில அரசு 457 வெள்ள நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. 2 ஆயிரத்து 265 கிராம மக்கள் வெவ்வெறு இடங்களில் தற்காலிக குடில்களிலும், நிவாரண முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ள நீர் புகுந்ததால், பல வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. அதிகாரப்பூர்வ தகவலின்படி 132 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. அதில், 14 காண்டாமிருகங்கள், 8 காட்டுப் பன்றிகள், 2 சதுப்பு மான்கள், 98 பன்றி மான்கள், 1 சாம்பார், 3 முள்ளம்பன்றிகள், 1 மலைப்பாம்பு உள்ளிட்டவை அடங்கும்.
அஸ்ஸாம் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து அம்மாநில அரசுடன் தொடர்பில் இருந்து அறிந்துவருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. தேசியப் பேரிடர் மீட்புப் படையும், அஸ்ஸாம் மாநில தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மெழுகுவர்த்தி, ரொட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது.