அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தை அடுத்துள்ள பக்ஜான் கிராமத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் (ஓஐஎல்) இயற்கை எரிவாயு உற்பத்தி செய்துவருகிறது.
இந்நிலையில், அந்நிறுவனத்திற்குச் சொந்தமான எரிவாயு உற்பத்தி செய்யும் கிணற்றில் கடந்த 8ஆம் தேதி திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆயில் நிறுவனத்தின் தீயணைப்பு சேவைத் துறையை சேர்ந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், இது சுற்றுவட்டார கிராமங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து குறித்து விசாரணையை மேற்கொள்ள அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அசாம் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில்,"பக்ஜான் எரிவாயுக் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணையை கூடுதல் தலைமைச் செயலாளர் மனிந்தர் சிங் தலைமையிலான உயர்மட்ட விசாரணைக் குழு மேற்கொள்ளும். அந்தக் குழுவின் விசாரணை அறிக்கை 15 நாள்களுக்குள் சமர்ப்பிக்கப்படும்.
நிறுவனத்தின் சில அலுவலர்கள் மற்றும் அதன் தனியார் கிணறு ஆபரேட்டர் குழுமத்தின் கவனக்குறைவு பற்றிய குற்றச்சாட்டு குறித்தும் இந்த விசாரணையில் ஆராயப்படும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நிகழக்கூடாது என்பதற்காக முழுமையான விசாரணை மேற்கொண்டு, பரிந்துரைகள் வழங்க உயர்மட்டக் குழுவுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. அவற்றின் மீது கவனம் செலுத்தி, நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறுகளை அரசு களையும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டின்சுகியா மாவட்டத்தின் பக்ஜானில் உள்ள கிணறு எண் 5 கடந்த 16 நாள்களாக கட்டுப்பாடில்லாமல் எரிவாயுவை வெளியேற்றி வருகிறது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீப்பிடித்தது, பெரும் விபத்து ஏற்பட்டது. சுமார் 30 கி.மீ வரை கரும்புகை மண்டலம் எழுந்துள்ளது.
தீ விபத்தைத் தொடர்ந்து டிப்ரு-சைகோவா தேசிய பூங்காவில் பல்லுயிர் சூழல் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது.
பக்ஜானில் உள்ள எரிவாயுக் கிணறு தளத்தின் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 7,000 பேரை 12 நிவாரண முகாம்களுக்கு அனுப்பியுள்ளதாக டின்சுகியா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எரிவாயுக் கிணறு தளத்தில் கடமை அலட்சியம் காட்டியதாக ஏற்கனவே பொதுத்துறை நிறுவனமான (பி.எஸ்.யூ) ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டு அலுவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் கிணற்றின் அவுட்சோர்ஸ் தனியார் ஆபரேட்டர் நிறுவனமான ஜான் எனர்ஜி பிரைவேட் லிமிடெடிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.