ராஜஸ்தானில் ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட்டை எதிர்த்து முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. சில நாள்களுக்கு முன்பாக சச்சின் பைலட், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சச்சின் பைலட்டிடம் சமரசம் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் குறைகளை தீர்க்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என ராகுல் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டத்துறை அமைச்சர் சாந்தி குமார் தரிவால் கொண்டு வந்துள்ளார். பின்னர் பேசிய அவர், "அசோக் கெலாட் தலைமையிலான அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது.
ராஜஸ்தானில் பாஜகவுக்கு நல்ல பாடத்தை கெலாட் புகட்டுவார். கோவா, மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றது போல் இங்கு நடக்க அனுமதிக்க மாட்டோம். சட்டப்பேரவை நடைமுறை தற்போது மோடி நடைமுறையாக மாறிவிட்டது" என்றார். பைலட் போர் கொடி தூக்கிய பிறகு காங்கிரஸ் கட்சி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 102ஆக குறைந்தது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பைலட் திரும்பியுள்ளதால், அந்த எண்ணிக்கை 125ஆக உயர்ந்துள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக 75 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இதன்மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. முன்னதாக, சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீரமானத்தை கொண்டு வர பாஜக திட்டமிட்டிருந்தது. நேற்று (ஆக.13) மாலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கெலாட்டின் வீட்டில் நடைபெற்றது. அதில், சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:'பிரணாப்பின் உடல்நிலை மோசமடையவில்லை'