பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
'உயிரோடு இருக்கும்வரை உண்மையை மட்டுமே பேசுவேன்'
பாட்னா: சிஏஏ, என்சிஆர், என்பிஆர் குறித்து உயிரோடு இருக்கும்வரை உண்மையை மட்டுமே பேசுவேன் என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிஷன்கஞ் மாவட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "சிஏஏ, என்சிஆர், என்பிஆர் குறித்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் தொடர்ந்து பேசிவருகின்றன. ஆனால், நான் பேசினால் மட்டும் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுகிறேன் எனக் குற்றம் சாட்டுகின்றனர். நான் உயிரோடு இருக்கும்வரை உண்மையை மட்டுமே பேசுவேன்.
நிதிஷ்குமார் முதலமைச்சராவதற்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சிகளே காரணம். 2015ஆம் ஆண்டு, மகா கூட்டணி என்ற பெயரில் ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் சிறுபான்மையினரை ஏமாற்றியது. பொய்களைச் சொல்லியே நிதிஷ்குமார் முதலமைச்சரானார். இதற்கு, ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியுமே காரணம்" என்றார்.