நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கிவருகிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை, 97 லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், அடுத்த 7-10 நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின் முறையே 3 முதல் 9 இடங்களில் உள்ளன. பத்தாவது இடத்தில் உள்ள அர்ஜென்டினா மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவுக்கும் சாதகமான ஒரு ஒற்றுமை உள்ளது.
அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தற்போது கோவிட்-19 பாதிப்பின் இரண்டாம் அலை சந்தித்துள்ளன. குறிப்பாக முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் மேல் பாதிப்புகள் ஏற்பட்டுவருகின்றன. டாப்-10 நாடுகளில் இந்தியா மற்றும் அர்ஜென்டினா மட்டும்தான் இரண்டாம் அலை பாதிப்பை சந்திக்கவில்லை.
இந்தியாவில் டெல்லி, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு உயர்வாக காணப்பட்டாலும், ஒட்டுமொத்த அளவில் நோய் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. மேற்கண்ட மாநிலங்களிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.