வேளாண்மை மனிதகுலத்துக்குத் தெரிந்த பழமையான தொழில். கால ஓட்டத்தில் இந்த தொழில் இன்னும் தப்பித்து வருகிறது. விவசாயத்துறைக்கு பண்டைய காலத்தில் இருந்தே பல சவால்கள் இருந்துள்ளன. ஆனால், தற்காலத்தில் விவசாயம் அதன் பழைய தொழில்நுட்பங்களை புதுப்பித்து, அடுத்த அத்தியாயத்தை நோக்கிச் செல்லவேண்டிய நிலை உள்ளது. பருவநிலை மாற்றம், உணவு தானியங்களின் தேவை அதிகரிப்பு, தரம் மற்றும் உற்பத்தி பெருக்கம் போன்றவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் விவசாயத்துறை தன்னை மாற்றிக் கொண்டு விரைவாக முன்னேற்றத்தை நோக்கி நிலையாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு, அற்புதமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் முக்கிய காரணம். ஒரு காலத்தில் இந்தியா அன்றாட உணவுத் தேவைக்காக இறக்குமதியை நம்பியிருந்த நாடு. இன்றோ, நம் உணவுத் தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்வதோடு, உலகிற்கும் ஏற்றுமதி செய்கிறோம். இதற்காக பசுமை புரட்சிக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
பசுமை புரட்சியின் போதுதான் விவசயாத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பசுமை புரட்சிக்கு முன், ஆண்டுக்கு 50 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்தோம். தற்போதோ, ஆண்டுக்கு 300 மில்லியன் டன் உணவு தானியங்கள் விளைவிக்கிறோம். தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாகவே இந்திய விவசாயத்தில் உற்பத்தித்திறன், பயிர் பாதுகாப்பு அல்லது பராமரிப்பு , அறுவடை முறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இந்த தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்க நம்மிடம் நல்ல தகவல் தொழில்நுட்பம் இருப்பது விவசாயத்துறையின் கூடுதல் பலமாக அமைந்துள்ளது. வேளாண்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் (Artificial Intelligence) இப்போது அவசியமாகியுள்ளது. இதனால், இயந்திரங்களின் தொழில்நுட்பம், செயல்பாடு, திறன் போன்றவற்றை விவசாயிகள் அறிந்து கொள்ள முடிகிறது.
செயற்கை நுண்ணறிவு என்பது மனித சிந்தனையுடன் இணைந்து செயல்படக் கூடிய அறிவாற்றல் ஆகும். இது மிக துல்லியமான முடிவுகளை தரக்கூடியது. மனித செயல்பாடுகளை குறைத்து தானே முடிவுகளை எடுக்கக்கூடியது. விவசாயத்துறைக்கு இது மிக பொருத்தமான தொழில்நுட்பம் ஆகும். பல விதங்களில், இது முடிவுகளை எடுப்பதை உள்ளடக்கியது. (உதாரணத்திற்கு விவசாயிகள் செல்போனிலிருந்தே, மோட்டாரை ஆன் செய்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் பாய்ந்ததும் மோட்டாரை ஆஃப் செய்யலாம்) விவசாயத்துறையில் மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் பல சமயங்களில் தவறில் போய் முடிந்து விடுகிறது. மனிதர்கள் செய்யக் கூடிய தவறுகளும் கவனிக்கப்படாமல் போய் விடுகிறது. எதிர்காலத்தில் வேளாண் துறையில் மனிதத் தவறுகள் ஏற்பட்டால் அது கடும் இழப்பில் போய் முடியக் கூடும். இதனால் விவசாயத்துறையில் உலகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுவதை, முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டு வேளாண் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வர்த்தகம் 1,550 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. வேளாண்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அனைத்து விதங்களிலும் பயன்படுத்த முடியும். குறிப்பாக முன்கூட்டியே கணித்தல், என்ன பயிரிடலாம் என்பதை முடிவு செய்தல், பயிர் விளைச்சலை கண்காணித்தல் போன்றவற்றில் இந்த தொழில்நுட்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தலாம்.
இந்தியாவில் விவசாயமும் காலநிலையும் பின்னிப்பிணைந்தவை. இந்திய வேளாண்துறையின் மொத்த உற்பத்தியில் 60 விழுக்காடு விவசாயம் வழியாகவே கிடைக்கிறது. மோசமான காலநிலையில் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க நல்ல திட்டங்களை கண்டறிவது மிக முக்கியமானது ஆகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் வழக்கமாக பயிரிடப்படும் பயிர்களுக்கு அதிகப்படியான மழை அல்லது ஈரமான மண் மழையே இல்லாத வறண்ட காலநிலை உருவானால் நம்மால் விவசாயத்துறையில் வெற்றி பெற முடியாது. இந்த பகுதிகளில் எந்த விதமான பயிர்களை பயிரிட்டால் வெற்றி பெறமுடியும் என்பதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கணித்து உதவும். காலநிலை, உள்ளுரில் அந்த பயிர்களுக்கு உள்ள சந்தை நிலவரம், சந்தையில் பயிருக்கு உள்ள தேவை போன்றவற்றையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எளிதாக கணித்து கூறி விடும். சர்வதேச விதை ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, மைக்ரோசாட் நிறுவனம் வறண்ட காலநிலை கொண்ட நாடுகளுக்காக 'பூசேத்னா' திட்டத்தின் கீழ், செயலி தயாரித்துள்ளது, இதன் வழியாக காரி பருவம் குறித்து விவசாயிகளுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பயிரிடுவதற்கு உகந்த நாள் குறித்த ஆலோசனை கூட இந்த செயலி வழியாக வழங்கப்படுகிறது.
இன்னும் ஒரு படி மேலே போய், மண், பயிர்கள் பராமாரிப்பு தருவது இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கூடுதல் பலம் ஆகும். புகைப்படங்களைக் கொண்டே பயிர்களில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். ஆரோக்கியமான நல்ல பயிர் வளர்ச்சியையும் கணித்து விட முடியும். இந்த தொழில்நுட்பத்தின் வழியாக எதிர்காலத்தில் மறைந்திருக்கும் ஆபத்துகளை விவசாயிகள் முன் கூட்டியே அறிந்து அவற்றை தவிர்த்து விட முடிகிறது. புகைப்படங்களை ஆய்வு மேற்கொள்வதன் மூலம் பயிர்களை தாக்கியுள்ள பூச்சிக் கொல்லிகளை அறிந்து கொள்வதோடு அதனை களைய வேண்டிய பூச்சிக் கொல்லி மருந்து குறித்த விவரங்களும் தரப்படும். பூச்சி கொல்லிகள் மென்மேலும் பரவ விடாமலும் வருங்காலத்தில் பயிர்களைத் தாக்குவதை தடுப்பதற்கான பரிந்துரைகளும் வழங்க முடியும். மண் ஆராய்ச்சி மையங்களின் தேவையில்லாமல் புகைப்பட மாதிரிகளை கொண்டே இந்த மண்ணில் எந்த பயிர் பயிரிடுவதற்கு ஏற்றது என்பதை கண்டுபிடிக்க முடியும். செயற்கை கோள்கள் உதவியுடன் மண்ணை புகைப்படம் எடுக்க முடியும். அதோடு, விவசாய நிலங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை ஒப்பிட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டு மண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து உடனடியாக விவசாயிகள் அவற்றை களைய வழிவகை உருவாகியுள்ளது. இதனால், மண் நலம் பாதுகாக்கப்படும்.