அரசியல் சாசன சட்டப்பிரிவு 370ன் கீழ் ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், காஷ்மீருக்கு பாகிஸ்தானிலிருந்து அச்சுறுத்தல்கள் வருவதாகக் கூறி அம்மாநிலம் முழுவதும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். மேலும், அமர்நாத் யாத்திரைக்கு சென்றவர்கள், சுற்றுலாப் பயணிகள், வெளிமாநில மாணவர்களை காஷ்மீரிலிருந்து வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தியது.
இதனால் பீதியில் உறைந்த காஷ்மீர் மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக, ஸ்ரீநகரில் இன்று காலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு சாதனங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. அத்துடன், மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட அம்மாநில அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், இன்று காலை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான குலாம் நபி ஆசாத், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பினார்.
பின்னர், உடனடியாக குறுக்கிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நான்கு மசோதாக்களை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார்.
அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் கூடிய அரசாணையை வெளியிட்டார்.
இதனை அறிவித்தவுடன் மாநிலங்களவையில் கடும் கூச்சலுடன் கூடிய அமளி நிலவியது. அதேவேளையில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டி தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதோடு அரசியல் சாசனத்தின் நகலை கிழித்தெறிந்தனர். உடனடியாக, அவர்களை வெளியேற்றுமாறு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதாகவும், அதன்படி ஒரு பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், மற்றொரு பகுதி சட்டப்பேரவையற்ற லடாக் யூனியன் பிரதேசமாகவும் உருவாகப்படவுள்ளது என அறிவித்தார்.
இதற்கு காங்கிரஸ், திமுக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே வேளையில், அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சிவ சேனா, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.