மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் அதன் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலை முன்னிட்டு இன்று மும்பையில் பாஜக கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”இந்தியாவில் முகலாயர்கள் ஆட்சியில், மகாராஷ்டிராவின் அரசர் சத்ரபதி சிவாஜிதான், அவர்களிடம் போரிட்டு அவர் தலைமையில் முதன் முதலில் சுயாட்சியை கொண்டுவந்தார். அந்த போர் ஆப்கானிஸ்தான் வரை மூண்டது.
இந்த மாநிலத்தில் நடைபெற்றுவரும் சுய ஆட்சிக்கு (பாஜக) அடுத்த மாதம் தேர்தல் நடக்கவுள்ளது ஆகையால், மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது அதனை எதிர்த்து அரசியல் செய்யும் காங்கிரஸிற்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? .
விடுதலைக்கு பின் காஷ்மீர் மாநிலத்திற்கு காங்கிரஸ் அரசு, செலவு செய்த 2.27 லட்ச கோடி ரூபாய் பணம், அம்மாநில மக்களுக்கு உரிய முறையில் சென்றடைந்திருந்தால், இந்நேரம் அவர்கள் 'வீடுகளின் மேல் தங்க கூரை' அமைத்திருப்பார்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கடந்த காஷ்மீர் ஆட்சியாளர்கள் சரியாக கொண்டு சேர்க்கவில்லை. ஆனால் இதற்கு பிறகு காஷ்மீரில் ஊழல் எதிர்ப்பு பிரிவு அமைக்கப்பட்டு, ஊழல் நடக்காமல் கண்காணிக்கபடும்.
இந்திய அரசியல் சட்டம் 370 பிரிவு காஷ்மீர் மக்கள் உரிமையை பாதுகாக்கவில்லை, அம்மாநிலத்தின் ஆட்சியாளர்கள் செய்யும் ஊழலை பாதுகாத்து வந்தது என்றார்.