மகாராஷ்டிராவில் பணியாற்றிவந்த பிகார், மத்திய பிரதேசம், ஒடிஸா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கோவிட்-19 ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு மும்பை நாக்பாடாவில் உள்ள புகழ்பெற்ற ஓட்டல் ரிப்பன் பெலஸ் அருகே நேற்று (மே 14) ஒன்று கூடிய வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயிலில் அனுப்பிவைக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நாக்பாடா காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடுமாறு கூறினர். மேலும், மகாராஷ்டிரா அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தனர்.
வட மாநில தொழிலாளர்களில் பெரும்பாலானோர் சரிபார்ப்பு, பிற முறைகளுக்காக தங்கள் ஆவணங்களை காவல்துறையிடம் அளித்தும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.