தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அர்னாபை விமானத்தில் துளைத்தெடுத்த பிரபல காமெடியனுக்கு ஸ்பைஸ் ஜெட் தடை! - குணால் கம்ரா விமானத்தில் பறக்க ஸ்பைஸ் ஜெட் தடை

விமானத்தில் அர்னாப் கோஸ்வாமியிடம் கேள்வி கேட்டதற்காக இன்டிகோ, கோ ஏர், ஏர் இந்தியா ஆகிய விமான சேவை நிறுவனங்களைத் தொடர்ந்து, ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் குணால் கம்ராவுக்கு தடை விதித்துள்ளது.

Arnab heckling incident: After IndiGo, Air India, SpiceJet suspends Kunal Kamra
Arnab heckling incident: After IndiGo, Air India, SpiceJet suspends Kunal Kamra

By

Published : Jan 31, 2020, 11:49 AM IST

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா பதிவிட்ட ட்வீட் தான் தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு விவாதங்களையும், கூடவே சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. குணால் செய்த செயலால், விமானத்தில் பறக்க தனியார் விமான நிறுவனங்கள் அடுத்தடுத்து அவருக்குத் தடை விதித்துவருகின்றன.

விமானத்தில் பறக்கத் தடை விதிக்கும் அளவுக்கு அவர் என்ன செய்துவிட்டார்?

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் இணை நிறுவனரும் மூத்தப் பத்திரிகையாளருமான அர்னாப் கோஸ்வாமி கடந்த 28ஆம் தேதி மும்பையிலிருந்து லக்னோவிற்கு இன்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார். இவருடன் காமெடியன் குணால் கம்ராவும் பயணித்துள்ளார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது யாரும் எதிர்பாரா வண்ணம் அர்னாப் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று பல்வேறு கேள்விகளை குணால் எழுப்பியுள்ளார். ஆனால், அர்னாப்போ அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் லேப்டாப்பின் மீதே தனது கவனத்தைச் செலுத்தியுள்ளார்.

இருப்பினும், குணால் அர்னாப்பை விடாமல் தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்திற்குப் பிறகு அர்னாப் கண்டுகொள்ளாததால் கோபமடைந்த குணால், கடும் சொற்களால் பேசத் தொடங்கினார். அர்னாப்பை கோழையா என்று பலமுறை கேட்ட குணால், கேள்விகளை ரோஹித் வெமுலாவுக்காகக் கேட்பதாகவும் கூறினார். கடைசி வரை அர்னாப், குணால் பேசுவதைக் காதுகொடுத்து கேட்காததால், குணால் மீண்டும் தன் இருக்கைக்கே சென்றுவிட்டார். மேலும், அங்கு நடந்த செயல்களுக்காக சகப்பயணிகளிடம் குணால் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அதோடு மட்டுமின்றி, இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோ எடுத்திருந்த குணால், அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார். அந்தப் பதிவில், தான் ரோஹித் வெமுலாவுக்காக அவ்வாறு செய்தேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. சிலர் அர்னாபுக்கு ஆதரவாகவும் இன்னும் சிலர் குணாலுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் களமாடினர்.

”குணாலை தடை பண்ணுங்க...”

விவகாரம் இந்திய அளவில் ட்ரெண்ட் அடித்துக்கொண்டிருந்த சூழலில், இன்டிகோ விமான சேவை நிறுவனம், ஆறு மாதத்திற்கு குணால் கம்ரா தங்களது விமானத்தில் பறக்க தடை விதித்தது. விஷயம் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி காதுக்கு எட்டவே, அவரும் குணால் கம்ராவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், விமானங்களில் பயணிகளுக்கு இடையூறாகவும் மோதல் ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்ட குணாலுக்கு மற்ற நிறுவங்களும் பறக்கத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக பிற தனியார் விமான சேவை நிறுவனங்களான கோ ஏர் மற்றும் ஏர் இந்தியாவும் குணால் கம்ராக்கு தடை விதித்தன. இதையடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் மறு அறிவிப்பு வெளிவரும்வரை குணால் தங்களது விமானத்தில் பறக்கத் தடை விதித்தது.

அரசாங்கத்துடன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் கோழைத்தனம்:

இதனால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்தது. குணாலுக்கு ஆதரவாகக் களமிறங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விமான நிறுவனங்களின் செயல்களைக் கடுமையாகச் சாடினார். அரசாங்கத்துடன் தங்களது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவே நான்கு விமான நிறுவனங்களும் குணால் கம்ராவைத் தடை செய்துள்ளன என்று கூறிய அவர், அது ஒரு கோழைத்தனமான செயல் என்றும் விமர்சித்தார்.

மேலும், 24 மணி நேரமும் தங்களது ’செய்தி’ கேமராக்களை அரசின் பிரசாரத்திற்காகப் பயன்படுத்துபவர்கள், அவர்கள் முன்னால் கேமராவை ஆன் செய்யும்போது, முதுகெலும்பு உள்ளவர்கள் போல் பதில் கூற வேண்டும் என்று அர்னாபையும் சாடைமாடையாக அவர் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: சூடு பிடிக்கும் டெல்லி தேர்தல் களம்: பாஜக நட்சத்திர பேச்சாளர்களுக்கு தடை

ABOUT THE AUTHOR

...view details