வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான ஆம்பன் புயல் மே 20ஆம் தேதி மாலை மேற்கு வங்கம் - வங்கதேசத்துக்கு இடையே கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியதுடன், கனமழை பெய்ததால் மேற்கு வங்கம் மாநிலம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மேற்கு வங்கம் இதுவரை கண்டிராத வகையில் ஏற்பட்ட இந்த புயல் மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. புயல் காற்றால் மரங்களும், மின் கம்பங்களும் அடியோடு சரிந்துள்ளன. பாலங்கள், கடைகள் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இந்தப் புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை மேற்குவங்க மாநிலத்தில் 80 பேர் உயிரிழந்தனர் என மேற்கு வங்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர், ஹவுரா ஆகிய மாவட்டங்கள் புயலால் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. குறிப்பாக, வடக்கு பர்கானா, தெற்கு 24 பர்கானா ஆகிய மாவட்டங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன. இதனால் 6 கோடி மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு மாநிலத்துக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அரசிடம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து, தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்குமென உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்திற்கு ராணுவத்தைச் சேர்ந்த 5 மீட்புப் படை அணிகள் கூடுதலாக விரைந்துள்ளனர்.