இந்தியா - நேபாளம் இடையிலான பாதுகாப்பு துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த உறவுகளையும் வலுப்படுத்தும் நோக்கில் மூன்று நாள் பயணமாக இன்று (புதன்கிழமை) இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே நேபாளத்திற்கு சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி வீணா நரவனேவும் சென்றுள்ளார்.
திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் எம்.எம்.நரவனேவை நேபாள லெப்டினென்ட் ஜெனரல் பிரபு ராம் வரவேற்றார். இந்திய-நேபாள எல்லையில் நிலவிவரும் முக்கிய பிரச்னைகள் குறித்தும், நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருநாட்டு ராணுவ அலுவலர்களுடனும், உயர்நிலை அலுவலர்களுடனும் இந்த சந்திப்பில் விரிவான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
மேலும், நேபாள ராணுவ தளபதி ஜெனரல் பூர்ணா சந்திர தாபாவை இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே சந்திக்க இருக்கிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் எம்.எம்.நரவனே நாளை மரியாதை செலுத்த உள்ளார். பிறகு அதிபர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு நரவனேவுக்கு அதிபர் வித்யாதேவி பண்டாரி நேபாள ராணுவத்தின் கவுரவ பதவி வழங்கவுள்ளார்.