தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாடு அரசின் தமிழறிஞர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ! - Applications are invited for the Tamil Scholars Awards

சென்னை : செம்மொழி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்திற்கும் பாடுபடும் தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் தமிழறிஞர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
தமிழ்நாடு அரசின் தமிழறிஞர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

By

Published : Aug 7, 2020, 3:01 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் தமிழறிஞர்கள் மற்றும் தமிழுக்கு தொண்டாற்றுபவர்களை சிறப்பிக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற விருதுகளை தோற்றுவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அந்த விருதுகளை வெகு சிறப்பாக வழங்கி வருகிறது.

அந்த வகையில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவில் திருவள்ளுவர் விருது (திருக்குறள் நெறி பரப்புவோருக்கு), மகாகவி பாரதியார் விருது (பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகப் பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப் பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிற வகையில் தொண்டு செய்தோர், செய்பவர்களுக்கு), பாவேந்தர் பாரதிதாசன் விருது (சிறந்த கவிஞருக்கு), தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (சிறந்த தமிழ் எழுத்தாளருக்கு), கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (சிறந்த தமிழ் அறிஞருக்கு), பெருந்தலைவர் காமராசர் விருது - 2020 (தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித்திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாக தமிழ் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளர் அவர்களின் அடிச்சுவட்டில், தமிழ்நாடு மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கு), பேரறிஞர் அண்ணா விருது (தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு) ஆகியவை வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பவர்கள் தங்களது விவர குறிப்புகளுடன் இரண்டு புகைப்படம், எழுதிய நூல்களின் பெயர்ப்பட்டியலுடன் அந்நூல்களில் ஒருபடி வீதம் ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை - 600008 (தொ.பே.எண்: 044-28190412, 28190413) என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details