தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தற்சார்பு இந்தியாவை தகர்க்கும் வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுக்கள்? - இந்தர் ஷேகர் சிங்

வேளாண் விளைபொருள் விற்பனை குழுக்கள் பற்றிய தனது பார்வையை வைக்கிறார் கொள்கை மற்றும் தொலைசேவைப் பிரிவு, இந்திய தேசிய விதைகள் அமைப்பின் இயக்குநர் இந்தர் ஷேகர் சிங்...

APMC dismantling a Self Reliant India?
APMC dismantling a Self Reliant India?

By

Published : May 21, 2020, 12:53 PM IST

அனைத்து துறைகளும் தடங்கல் ஏதுமின்றி நாடு முழுவதும் விற்பனை செய்யலாம் என்னும்போது, விவசாயிகள் மட்டும் விதிவிலக்கா என்ன? நமது மத்திய நிதியமைச்சர் சொல்லியிருப்பது சரிதானே! எல்லோருக்கும் பொதுவான நடைமுறை வரவேற்கத்தக்கது அல்லவா? மேலோட்டமாக பார்க்கும்போது, இதில் குறையேதுமில்லை, மிகவும் நியாயமானது என்றே தோன்றும். ஆனால், உண்மையில் அப்படியா? விவசாயத்தையும் ஏனைய துறைகளையும் ஒரே அளவுகோலில் வைக்கலாமா? இந்த கேள்விகள் குறித்து ஆழமாகப் புரிந்து கொள்ளவும், விடைகாணவும் நாம் சற்றுபின்னோக்கிச் செல்லவேண்டும்.

நமது அரசியல் சாசன உருவாக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பற்றிய தெளிவுடன் இவற்றை அணுகவேண்டும். கிழக்கிந்திய கம்பெனியின் 350 ஆண்டுகால கடும் சுரண்டலின் காரணமாக இந்திய விவசாயிகள் நாய்களுக்கும் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டனர். உலகின் முதல் வேளாண் வணிக பன்னாட்டு நிறுவனம், இந்த கிழக்கிந்திய கம்பெனிதான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்தியர்களை தரம்தாழ்ந்தவர்களாகக் கருதிய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மக்கள் விரோத கொள்கைகளால் வங்கத்தில் மாபெரும் பஞ்சம் தோன்றியது. பல்லாயிரக்கணக்கான மக்களை இந்தப் பஞ்சம் காவு வாங்கியது. பஞ்சத்தின் தீவிரத்தால் பிற மாகாணங்களிலும், இந்தியர்கள் பசி பட்டினியால் செத்து மடிய, வைசிராயின் விருந்துகளில் அந்நிய மது வகைகள் ஆறாய் ஒடிய கொடுமையும் நடந்தேறியது.

வேளாண் பெருவணிக முதலைகளின் கட்டற்ற சுரண்டலைக் கண்டுணர்ந்த காரணத்தால், அரசியல் சாசனத்தை உருவாக்கிய நமது தலைவர்கள் விவசாயத்திற்கு தகுந்த சட்டப்பூர்வ பாதுகாப்பை ஏழாவது அட்டவணை (பிரிவு 246) வாயிலாக உறுதி செய்தனர். மாநில பட்டியலில் விவசாயம் 14ஆவது உறுப்பாகவும், சந்தை மற்றும் அங்காடிகள் 28ஆவது உறுப்பாகவும் சேர்க்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தியாவின் வேளாண் நிலங்கள் கபளீகரமாகும் மோசமான நிலைமை மீண்டும் ஒருமுறை நிகழ்ந்துவிடக்கூடாது என்ற அக்கறையுடன் பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டன.

வேளாண் நிலங்கள் மீதும் அதன் உற்பத்தியின் மீதும் மாநிலங்களுக்கு உச்சபட்ச தன்னாட்சி வழங்க அரசியல் நிர்ணய சபை தலைவர்கள் விரும்பினர். ஒரே மாதிரியான அமைப்பு முறை தேசம் முழுமையும் பரவியுள்ள விளைநிலங்கள் மற்றும் சந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கவியலாது என்ற தெளிவான புரிதல் அவர்களுக்கு இருந்தது. வெவ்வேறு வேளாண் மண்டலங்களும், தட்பவெப்ப பிராந்தியங்களும் தமக்கே உரிய சமூக பொருளாதார தனித்தன்மைகளைக் கொண்டிருப்பதால், முழுமையான மத்திய கட்டுப்பாடு என்பது கொள்கையளவில் பெரும் தவறாக மட்டுமன்றி, அப்பட்டமான கொடுங்கோண்மையும் ஆகும்.

தற்போது, வேளாண் விளைபொருள் விற்பனை குழுக்கள் சட்டம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்க நியாயமான முறையில் சம வாய்ப்பை உறுதி செய்கிறது. எங்கோ, தொலைவில் ஒரு குக்கிராமத்தில் உள்ள விவசாயியும் இந்த வாய்ப்பைப் பெற வழியுண்டு. மேலும், இந்த சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சிறு வணிகர்கள் கொள்ளை இலாபம் அடிப்பதை தடுத்து சீரான தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதிசெய்வதுடன், விவசாயிகளோ அல்லது வணிகர்களோ நியாயமற்ற பேரத்தில் ஈடுபடுவதை தடுக்கிறது. வேளாண் விளைபொருள் விற்பனை குழுக்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்களை உள்ளடக்கிய உள்ளூர் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டன. இவற்றின் செயல்பாடுகளில் சில நடைமுறை தவறுகள் மேலெழுந்த பொழுது, இவை மேலும் வலுப்படுத்தப்பட்டன.

அழுத்தம் காரணமாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அடிமாட்டு விலைக்கு விற்க தள்ளப்பட்டு ஏமாற்றப்பட்டதால், இந்த சட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் விளைவாக மண்டிகளைத் தாண்டி, மாநிலங்களுக்கு இடையேயான வேளான் வர்த்தகமும் இந்தக் குழுக்களின்கீழ் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்வதுடன், குழுக்களின் நிர்வாகத்தை சீர்செய்வதும் இதன் நோக்கமாகும்.

மண்டிகள் இல்லாமல் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்துவது சாத்தியமற்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்கள் கையில் இந்த பொறுப்பை நம்பி ஒப்படைக்க முடியாது. காரணம், வணிகர்கள் போலவே தனியாரும் இலாப நோக்கத்தையே முதன்மையாகக் கொண்டவர்கள். பகாசுர தனியார் வேளாண் வணிக நிறுவனங்களின் வளர்ச்சியின் பின்னணியில், விவசாயிகளின் துயரம் தோய்ந்த வரலாறு உள்ளதைப் புறந்தள்ளிவிட முடியாது. விலை நிர்ணயம் செய்யும் ஒழுங்குமுறைகளைக் கைவிட்ட பின்னர் அமெரிக்காவிலும், உலகின் பிற நாடுகளிலும் பெரு நிறுவனங்கள் அசுர வளர்ச்சி பெற்றதை இங்கு நினைவுகூர்வது அவசியம்.

கார்கில், லூயி ட்ரெஃபையுஸ் போன்ற நிறுவனங்கள் வளர்ந்த கதை இதுதான். விவசாய கூட்டுறவு அமைப்புகள் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டு அதன் பின்னணியில் மேலெழுந்த சந்தை சக்திகள், அமெரிக்காவில் புதிய விவசாய அடிமைத்தனம் உருவாக காராணமாக அமைந்தன. இந்த சந்தை சக்திகளின் கைங்கர்யம்தான் என்ன? உலகின் ஒரே வல்லரசான அமெரிக்காவில் நிகழாண்டில் விவசாயக் கடன் 425 பில்லியன் டாலர் (2020 கணக்கீட்டின்படி). ஆனால், அதே சமயம், உலகின் 70% உணவு தாணிய வர்த்தகத்தை 4 நிறுவனங்கள் மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

பிகாரின் விசித்திரம்: தொடரும் விவசாயிகளின் துயரம் விவசாயத் துறையை நவீனமாக்கும் உயரிய நோக்கத்துடன் தனியார் முதலீடுகளை ஈர்க்க, பிகார் அரசு 2006-ஆம் ஆண்டு சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சில ஒழுங்குமுறைகளைக் கைவிட்டது. சந்தை வசதி மற்றும் சேவைத்தொடர் சங்கிலியில் தேவையான உள்கட்டமைப்புகளை தனியார் முதலீடுகள் மூலம் மேம்படுத்த, விவசாய விளைபொருள் விற்பனை குழுக்கள் சட்டம் நீக்கப்பட்டது. இதனால் விளைபொருளுக்கு சரியான விலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடந்தது என்னவோ எதிர்பார்ப்புக்கு நேரெதிரான ஏமாற்றமே. விவசாய கட்டமைப்பை மேம்படுத்தும் எந்த ஒரு செயல்பாட்டிலும், திட்டத்திலும் தனியார் முதலீடு என்பது கானல் நீராகவே அமைந்தது.

விவசாயம் சார்ந்த தொழில் துறையினர் முதலீடு செய்யவில்லை என்பதுடன், விவசாயிகள் மேலும் சுரண்டலுக்கு ஆளாயினர். விவசாய விளபொருள் விற்பனைக் குழு சட்டம் இல்லாத காரணத்தால், விவசாயிகளுக்கு முன்னைவிட மிகக் குறைந்த விலைக்கே வணிகர்களிடம் விற்க வேண்டியதாயிற்று. இவ்வாறு குறைந்த விலக்குப் பெற்ற தானியங்களை, வணிகர்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ள மண்டிகளில் அதிக இலாபத்திற்கு விற்று வருகின்றனர். ஆண்டுதோறும், இதுவே வழமையாகிவிட்டது.

விவசாயிகள் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்தால் என்ன, சட்ட விரோத வாணிபம் சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை இதுதான் போலும்! விவசாயத்தைக் காப்பத்த சட்டத்தைக் கைவிடுவதா...

பிகார் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் நிலையும் அப்படித்தான் உள்ளது. விவசாயத் துறையில் இந்தியா எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்னை இதுதான். தேசம் முழுமைக்கும் 50,000 மண்டிகள் தேவை. ஆனால், நாம் ஒழுங்குமுறையுடன் உருவாக்கியுள்ளது வெறும் 7,000 மட்டுமே. இதில் கொடுமை என்னவென்றால், ஒரு ஆய்வின்படி, 94% விவசாயிகள் மண்டிகளுடன் தொடர்பற்றவர்கள். மேலும், இந்த அமைப்பில் விளையாடும் லஞ்ச லாவண்யம் பற்றி தனியே எழுதவேண்டும். ஆனால், மனிதர்களால் உருவாக்கப்படும் எந்த ஒரு அமைப்பும், பேராசைக்கும் லஞ்சத்திற்க்கும் அப்பாற்பட்டதல்ல. ஜனநாயக அரசுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்னும் சொல்லபோனால், ஜனநாயக அரசுகள்தான் லஞ்ச லாவண்யத்தின் மிகப் பெரும் பலிகடாக்கள். இருப்பினும், ஊழல் போன்ற தவறுகளுக்காக ஜனநாயகத்தையே தூக்கியெறிந்து விடுகிறோமா? இல்லையே. அதைத்தானே பற்றிக்கொண்டு இருக்கிறோம்!

ஆனால், நமது அரசு இந்த பிழையான வாதத்தினை எடுத்துக்கொண்டு, வேளாண் வணிகம் மற்றும் வேளாண்-சார் தொழில் மூலம் கிட்டும் அமெரிக்க டாலருக்காக, நமது விவசாயிகளைப் பலிகொடுக்கிறது.

விவசாயத்தின் நிலைமை இவ்வாறிருக்க, நமதுஅரசு என்ன செய்திருக்க வேண்டும்? தற்போது எடுத்துள்ள நடவடிக்கைக்கு நேரெதிரான செயல்பாட்டை அல்லவா முன்னெடுத்திருக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும், தனது விளைபொருளுக்கு அருகில் உள்ள மண்டியில் குறைந்தபட்ச ஆதார விலையையோ அல்லது நியாயமான விலையையோ பெற அரசு உத்தரவாதம் செய்யவேண்டும். எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்பது, குறைந்தபட்ச ஆதார விலையைப் பெற உதவாது, மாறாக, கட்டுபடியாகாத மிகவும் குறைந்த விலைக்கே அவர்கள் விற்கவேண்டி வரும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள்.

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க, இருக்கும் அமைப்பினை சீரமைக்க வேண்டும், சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டுமேயொழிய, கைவிடக்கூடாது. இந்த பின்புலத்தில் பார்க்கும்போது, நமது நிதியமைச்சரின் நிலைப்பாடும், விவசாயத்தைப் பிற துறைகளுடன் ஒப்பிடுவதும் ஏற்புடையது இல்லை. வலுவற்ற வாதமே. உதாரணத்திற்கு, இமாச்சல பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் விவசாய நிலம் விற்பது தொடர்பான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இப்போது, அந்த கட்டுப்பாடுகளை, நில உச்சவரம்பு சட்டத்துடன் தூக்கி எறியவேண்டுமா? மத்திய அரசு செய்ய வேண்டியது என்ன?

அரசின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்பாட்டையும் மட்டுமே மையப்படுத்தி இருக்க வேண்டியதல்ல. அத்தகைய அளவுகோலை வைத்தே திட்டமிடுதல் சரியன்று. மக்களைப் பாதுகாக்க வேண்டிய

இன்றியமையாத கடப்பாடு அரசுக்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. நமது நிதியமைச்சரும் அரைவேக்காட்டுத்தனமான நடவடிக்கைகளைக் கைவிட்டு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளில் தீவிரம் காட்ட வேண்டும். அரைக் கிணறு தாண்டுவது ஆபத்தானது. அரைகுறை நடவடிக்கைகளால், சோர்ந்து, நலிவுற்று, நசிந்துபோயிருக்கும் நமது நாட்டின் விவசாயம் முற்றாக அழிந்துபோகும் அபாயம் உள்ளது.

பிகார் மாடல் நமக்கென எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், பிகாரின் நிலைமை ஒட்டுமொத்த தேசத்திற்கும் வரலாம். இடுபொருட்களின் விலையேற்றமும் வீழ்ச்சியடைந்து வரும், வருமானமும் விவசாயிகளை வாட்டி வதைக்க, இந்திய விவசாயம் ’தற்சார்பு’ இன்றி வேளாண் வணிகம் சார்ந்த ஒன்றாக மாறிப்போகும் அவலத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அமெரிக்காவை அடியொற்றி, இந்தியாவும் விவசாயத்தின் கதவுகளை பெருவர்த்தக நிறுவனங்களுக்கு திறந்துவிட முடியாது. நமது விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால், அவர்கள் நலனை முன்னெடுக்க வேண்டும் என்றால், மீண்டும் ஒரு கிழக்கிந்திய கம்பெனியின் சுரண்டலுக்கு நாட்டைத் தாரைவார்ப்பதை, அரசு கைவிட வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details