தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இயற்கை வளத்தைக் காக்கப் போராடிய தலித் இளைஞரை சித்ரவதை செய்த காவலர்கள் ! - கோதாவரி பகுதி

கோதாவரி: சட்டவிரோதமாக லாரிகளில் மணலைக் கடத்தியதை எதிர்த்த தலித் இளைஞரை சிறையில் அடைத்து ஆந்திரப் பிரதேச காவல் துறையினர் சித்ரவதை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை வளத்தைக் காக்கப் போராடிய தலீத் இளைஞரை சித்ரவதை செய்த காக்கிகள் !
இயற்கை வளத்தைக் காக்கப் போராடிய தலீத் இளைஞரை சித்ரவதை செய்த காக்கிகள் !

By

Published : Jul 22, 2020, 12:50 AM IST

ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை அடுத்துள்ள சீதநகரம் பகுதியில் சட்டவிரோதமாக லாரிகளின் மூலம் ஆற்றுமணல் கடத்தப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சியான ஒய்.சி.பியின் உள்ளூர் தலைவர் காவலா கிருஷ்ணமூர்த்தி ஆதரவில் மணலை திருடிக் கொண்டு சென்ற லாரிகளை தலித் இளைஞர் வரப்பிரசாத் வழிமறித்து ஏற்றிவந்த மணலை மீண்டும் அங்கே கொட்டுமாறு தனிமனிதனாக போராடியுள்ளார்.

இதனையடுத்து, தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சீதநகரம் காவல் நிலைய காவல் அலுவலர்கள், மணல் லாரிகளை ஓட்டிவந்தவர்களை கைது செய்வதற்கு பதிலாக இயற்கை வளத்தைக் காக்க போராடிய வரப்பிரசாத்தை கைது செய்துள்ளனர்.

ஒய்.சி.பி கட்சியின் ஆதரவாளர் ஒருவர் அளித்த பொய்யான புகாரைத் தொடர்ந்து அப்பாவி இளைஞர் வரப்பிரசாத் மீது வழக்குப் பதிவு செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை விசாரணை என்ற பெயரில் கடுமையா தாக்கி, சித்ரவதை செய்து, அவரது மீசையையும் முடியையும் வெட்டியுள்ளனர்.

காவல்துறையினரின் கடுமையான சித்ரவதையால், வரப்பிரசாத் சுயநினைவை இழந்துவிட்டார். பின்னர் அவரை ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

தலித் இளைஞர் வரப்பிரசாத் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அப்பகுதி மக்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. வெகுண்டெழுந்த மக்கள் காவல்துறையினரின் மனித உரிமை மீறலைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கினர்.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக அறிவித்தது. முதல்கட்டமாக, இளைஞர் வரப்பிரசாத்தை தாக்கிய சீதநகரம் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வரப்பிரசாத், " காவல்துறையினரின் அணுகுமுறையால் அச்சமடைந்துள்ளேன். உள்ளூர் ஒய்.சி.பி தலைவர் காவலா கிருஷ்ணமூர்த்தி என்னை அவரது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றார். நியாயத்திற்காக போராடிய என்னை காவல்துறையினர் இரக்கமின்றி துன்புறுத்தினர். நான் கூட அவர்களின் கால்களைப் பிடித்து, என்னை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சினேன். இருந்தும் அவர்கள் என்னை விடாமல் சித்ரவதை செய்தனர்" என கூறினார்.

சீதநகரம் காவல் நிலையத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து பேசிய டிஜிபி கவுதம் சவாங், "காவல் நிலையத்தில் ஒரு இளைஞன் மீது சட்டத்திற்கு புறம்பாக தாக்குதல் நடத்தியதை ஒருகாலமும் ஏற்க முடியாது. இந்த சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.ஐ ஃபெரோஸ் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் ஆகிய மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையான சம்பவங்கள் காவல் துறையில் நடப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது" என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details