இது தொடர்பாக ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில், "ஆந்திரப் பிரதேசம் 55 ஆயிரத்து 607 அங்கன்வாடி மையங்களில் இணைக்கப்பட்ட 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மாதம்தோறும் அரசின் அத்தியாவசிய ரேஷன் பொருள்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒய்.எஸ்.ஆர் சம்பூர்ணா போஷனா, ஒய்.எஸ்.ஆர் சம்பூர்ணா போஷனா ப்ளஸ் ஆகிய இரு சத்துணவுத் சிறப்புத் திட்டங்களை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இரு திட்டங்கள் மூலம் 30 லட்சம் பெண்கள், குழந்தைகள் பயனடைவர். ஒய்.எஸ்.ஆர் சம்பூர்ணா போஷனா திட்டமானது, மாநிலம் முழுவதும் 47,287 அங்கன்வாடி மையங்கள் மூலம் சத்தான உணவை விநியோகிக்க உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 5.8 லட்சம் கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்களுக்கு மாதத்திற்கு 25 நாட்களுக்கு சூடான பால், அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் முட்டை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் டேக்-ஹோம் ஊட்டச்சத்து கிட் தலா 250 கிராம் வேர்க்கடலை வெண்ணெய், வெல்லம் மற்றும் உலர்ந்த பேரீச்சைப் பழங்கள், ஒரு கிலோ சஜ்ஜா மாவு ஆகியவை வழங்கப்படும். இதற்காக 5.80 லட்சம் பயனாளிகளுக்கு மாதம்தோறும் தலா 850 ரூபாய் வீதம் மொத்தம் ரூ. 592 கோடியை அரசு செலவிட உள்ளது.
ஒய்.எஸ்.ஆர் சம்பூர்ணா போஷனா பிளஸ் திட்டமானது, ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் உள்பட புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. எட்டு ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவன மையங்கள் (ஐ.டி.டி.ஏ), 52 ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மையங்கள் (ஐ.சி.டி.எஸ்) இணைந்து 77 பழங்குடி மண்டலங்களில் உள்ள 8,320 அங்கன்வாடி மையங்கள் மூலம் 3.8 லட்சம் பயனாளிகளுக்கு இந்த திட்டத்தைச் சென்றடைய வைக்கவுள்ளது.