கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி, 50 சொத்துக்களை விற்பனை செய்வது குறித்து 253 தீர்மானத்தை ட்டி.ட்டி.டி நிர்வாகம் வெளியிட்டது. அத்தீர்மானத்தின்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயன்படாத நிலங்களை விற்பனை செய்து அதன் மூலம் ரூ. 100 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் திருமலை திருப்பதி கோயிலின் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நில விற்பனைக்கு தடை விதித்து ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
TTD (ட்டி.ட்டி.டி) நில விற்பனைக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது ஆந்திர அரசு.
திருமலை திருப்பதி கோயிலின் நில விற்பனை விவகாரத்தில் நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பக்தர்களின் உணர்வைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நில விற்பனைக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது ஆந்திர அரசு.
அந்த அரசாணையில் மத தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள், பக்தர்கள், பங்குதாரர்களின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு கோயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அந்த பயன்படாத இடங்களில் கோயில்கள், மத பிரச்சாரசாலைகள் உள்ளிட்ட மத சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை 50 இடங்களை விற்பனை செய்வதற்கான திட்டம் நிறுத்தப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக முழு அறிக்கையையும் சமர்ப்பிக்க திருமலை திருப்பதி கோயிலுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பொது நிர்வாகத்தின் தலைமைச் செயலாளர் பிரவீன் பிரகாஷ் வெளியிட்டார்.