தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தந்தை உருவாக்கிய சட்ட மேலவையைக் கலைக்கும் மகன்! - ஆந்திராவில் அடுத்து என்ன நடக்கும்? - ஆந்திர சட்டமேலவை

2007ஆம் ஆண்டு ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மீட்டுருவாக்கம் செய்த ஆந்திர சட்ட மேலவையைக் கலைக்க அவரது மகன் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு முடிவுசெய்துள்ளது. அவர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் மேலவையைக் கலைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

AP Cabinet okays proposal to abolish Legislative Council
AP Cabinet okays proposal to abolish Legislative Council

By

Published : Jan 27, 2020, 3:00 PM IST

Updated : Jan 27, 2020, 4:07 PM IST

ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகர்களை உருவாக்க ஒரு மசோதா, ஆந்திர தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையச் சட்டம் 2014ஐ ரத்து செய்யும் ஒரு மசோதா என ஆந்திர சட்டப்பேரவையில் (கீழவை) இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் இரு மசோதாக்களையும் விரைவாக நிறைவேற்றிய ஜெகன்மோகன் அரசால் சட்ட மேலவையில் நிறைவேற்ற இயலவில்லை.

காரணம், சட்டப்பேரவையில் ஜெகன்மோகன் அரசுக்கு இருக்கும் பெரும்பான்மை பலம் சட்ட மேலவையில் அதற்கு தலைகீழாக இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி சட்ட மேலவையில் ஜெகன்மோகனுக்கு தடையாக உள்ளது. மொத்தம் 58 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மேலவையில் 9 உறுப்பினர்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸும் 28 உறுப்பினர்களை தெலுங்குதேசமும் கொண்டுள்ளன.

இதனால், ஆளும் அரசால் இரு மசோதாக்களையும் சட்ட மேலவையில் நிறைவேற்ற முடியவில்லை. மசோதாக்களில் திருத்தம் மேற்கொள்ள மேலவைத் தலைவர் இரு மசோதாக்களையும் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது, அரசை மேலும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. மசோதாக்கள் சட்டமாவதை மேலவையால் முழுவதுமாக தடுத்துநிறுத்திவிட முடியாவிட்டாலும் சில மாதங்கள் தாமதப்படுத்தலாம். தாமதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஜெகன்மோகன் இரண்டாம் நாளாக நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரில் சில கேள்விகளை முன்வைத்தார்.

அவர் பேசியது பின்வருமாறு:

‘மக்களின் நலனுக்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை வேண்டுமென்றே சட்ட மேலவை தடுக்கிறது. ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்க வழிவகை செய்யும் மசோதா, தாழ்த்தப்பட்டோருக்கு நல வாரியம் அமைக்கும் மசோதா உள்ளிட்டவற்றை சட்ட மேலவை தடுத்துவருகிறது. இதுபோன்ற அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் கண்மூடித்தனமாக எதிர்த்துவரும் மேலவைக்கு, மக்களின் வரிப்பணத்திலிருந்து ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் செலவளிக்கப்படுகிறது.

நிலவரம் இப்படியிருக்கையில், மக்கள் தயவால் இயங்கும் சட்ட மேலவையோ மக்களின் தேவையை நிறைவேற்ற தடைக்கல்லாக நிற்கிறது. நாட்டிலுள்ள 29 மாநிலங்களில் ஐந்து மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது. எனவே, மாநிலத்தில் நிதிப்பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில் மேலவை வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்த விவாதம் ஜனவரி 27ஆம் தேதி (இன்று) சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரில் நடைபெறும்’ என்று ஜெகன்மோகன் ரெட்டி பேசியிருந்தார்.

அவரின் இந்தப் பேச்சில் முழுக்க முழுக்க சட்ட மேலவையைக் கலைப்பதற்கான வரிகளே இடம்பெற்றிருந்தன. இதனிடையே சந்திரபாபு நாயுடு ஆந்திர ஆளுநரைச் சந்தித்து, மேலவைத் தலைவர் எம்.ஏ. ஷாரிஃப்புக்கு ஆளும் அரசு நெருக்கடி கொடுப்பதாகவும் சட்ட மேலவையைக் கலைக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஜெகன்மோகன் அரசின் மீது புகார் கொடுத்திருந்தார்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம். நீண்ட விவாதத்துக்குப் பின் ஒருமனதாக சட்ட மேலவையைக் கலைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்விவகாரம் ஆந்திர மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மத்தியிலும் இம்முடிவு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. சட்ட மேலவை வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவெடுக்கும் அனைத்து தார்மீக உரிமைகளும் மாநில சட்டப்பேரவையிடமே உள்ளதால், எதிர்க்கட்சியால் இதனை முறியடிக்க ஒரு விழுக்காடு கூட வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம்.

ஆந்திர சட்ட மேலவை உருவாக்கம் மற்றும் கலைப்பு - ஓர் ரீவைண்ட்:

1958ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒற்றை அவையாகச் செயல்பட்டுவந்த ஆந்திர சட்டப்பேரவை, அதே ஆண்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு இரு அவைகளாக மாற்றம் பெற்றது. (சட்ட கீழவை, சட்ட மேலவை) இதன்பின், நிதிப்பற்றாக்குறை, பிரதிநிதித்துவம் ஆகியவற்றைக் காரணம் காட்டி என்.டி. ராமாராவ் தலைமையிலான அரசு சட்ட மேலவையைக் கலைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, சட்ட மேலவை 1989ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.

இதையடுத்து, 2004ஆம் ஆண்டு முதலமைச்சரான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி (ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை) மேலவையை மீட்டுருவாக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, 2007ஆம் ஆண்டு மீண்டும் மேலவையை உருவாக்கினார். தற்போது, அவரது மகன் தலைமையிலான அரசின் அமைச்சரவை மேலவையைக் கலைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சட்ட மேலவையைக் கலைப்பதற்கான வழிமுறைகள்:

சட்ட மேலவையைக் கலைப்பதற்கான தீர்மானத்தை முதலில் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றிய பின், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலுக்கு அனுப்பபடும். தீர்மானத்திற்கு மக்களவை ஒப்புதல் அளித்த பின் மாநிலங்களவை ஒப்புதல் அளித்தால் அது சட்டமாக்கப்படும். இறுதியில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின் சட்ட மேலவை கலைக்கப்படும்.

நாட்டில் தற்போது பிகார், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை நடைமுறையிலுள்ளது.

அமராவதி மட்டுமே தலைநகரம் vs அமராவதியும் ஒரு தலைநகரம் - வெல்லப்போவது யார்?

தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் மேலவை கலைப்பும் உருவாக்க திமுக எடுத்த முயற்சியும்:

இதேபோன்று தமிழ்நாட்டிலும் சட்ட மேலவை இருந்தது. அது 1986ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் கலைக்கப்பட்டது. அதன்பின், ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான அரசு, எவ்வளவு முயன்றும் மேலவையை மீட்டுருவாக்கம் செய்யமுடியவில்லை. 2010ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் மேலவைக்கான சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வரை சென்றிருந்த போதிலும், 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியமைத்ததால், மேலவையை உருவாக்கும் முடிவு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இதையும் படிங்க: சட்ட மேலவையின் அதிகாரங்கள் - மசோதாவை தோற்கடிக்குமா?

Last Updated : Jan 27, 2020, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details