பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் மீது சில தினங்களுக்கு முன்பு நடிகை பாயல் கோஷ் ’Me Too’ இயக்கத்தின்கீழ் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் பல இந்தி திரைப்பிரபலங்கள் அனுராக்கிற்கு ஆதரவாகக் குரல் ஏழுப்பினர். மேலும், அனுராக் தரப்பிலிருந்து பாயலின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, நடிகை பாயல் கோஷ், மும்பை, வெர்ஸோவா காவல் நிலையத்தில் இயக்குநர் அனுராக் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். ஆனால் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தபோதிலும் விசாரணை நடத்துவதில் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நடிகை பாயல் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவை சந்தித்து அனுராக் காஷ்யப் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.