அமராவதி: ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள தேர் ஞாயிற்றுக்கிழமை (செப்.6) சந்தேகத்துக்குரிய வகையில் தீப்பிடித்து எரிந்தது.
இது மாநிலம் முழுக்க கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. இது தொடர்பாக துரித விசாரணை நடத்தி, உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தேர் எரிந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேர் 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. தேக்கு மரத்தால் செய்யப்பட்ட இந்தத் தேர், கோயில் வளாகத்தில் உள்ள கொட்டகையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்தேகத்துக்குரிய வகையில் தீயில் எரிந்தது.
இந்த விவகாரத்தில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா உள்ளிட்ட கட்சிகள் மாநில அரசை குற்றஞ்சாட்டியுள்ளன. “இந்து கோயில்களைப் பாதுகாப்பதில் ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கத்தின் குறைபாடான அணுகுமுறையை தேர் எரிந்ததற்கு காரணம்” என குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜெகன் எழுதியுள்ள கடிதத்தில், “மாநிலத்தில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சில அரசியல் கட்சிகள், குழுக்கள் செயல்படுகின்றன” எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க தேரினை கோயிலுக்கு அளித்த பக்தர்