கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை டெல்லியில் அதிகரித்துவருவதால், படுக்கை வசதிகள், உணவு, உள்கட்டமைப்பு ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளதாக டெல்லி அரசு கவலை தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் வைத்துள்ள டெல்லி வாழ் மக்களுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதியளிக்க வேண்டும் என டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், டெல்லி அரசின் உத்தரவு தவறானது என உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். நாட்டின் தலைநகரான டெல்லிக்கு, வேலை வேண்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்துவாழ்கின்றனர். டெல்லியில் வசிக்காதவர் எனக் காரணம் காட்டி நோயாளிக்கு சிகிச்சை அளிக்கவில்லையெனில் அது தவறானது.
ஊரடங்குக்குப் பிறகான காலத்தில் வெளியே செல்லும் மக்கள் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். தேவையின்றி பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மக்கள் நலன்கருதி இதனை பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனையாக வழங்குகிறது" என்றார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் டெல்லி வாழ் மக்களுக்கு மட்டுமே அனுமதி!