புதுச்சேரியில் 150க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாத ஊதியம் சரிவர வழங்கப்படவில்லை என்றும், சிலருக்கு உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியத்தை அரசு இதுவரை வழங்கவில்லை எனவும் கூறி, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் அருகே நேற்று(அக்.6) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் மாலை கோரிக்கைகளை வலியுறுத்தி உப்பளம் பகுதியில் உள்ள புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி வீட்டு அருகே முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.