தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

#Exclusive... தமிழ் வழிக் கல்வி கற்க உயிரை பணயம் வைக்கும் மாணவர்கள் - படகு சவாரி செய்யும் மாணவர்கள்

ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு உயிரை பணயம் வைத்து வந்து மாணவர்கள் படிக்கின்றனர்.

andhra-students

By

Published : Sep 17, 2019, 8:28 PM IST

Updated : Sep 17, 2019, 8:43 PM IST

ஆந்திர மாநிலம் தடா வட்டம், இறக்கம் கிராமத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டம் சுண்ணாம்புக் குளத்தில் உள்ள அரசு பள்ளியில்தான் மாணவர்கள் கல்வி பயில வருகிறார்கள். அவர்களுக்கான போக்குவரத்து வசதியை இன்றளவும் அம்மாநில அரசு சரிவர செய்து தரவில்லை என்பதே அங்கு வசிக்கும் மக்களின் வேதனை. பள்ளியில் கற்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான படகு சவாரியை மேற்கொள்கிறார்கள் இறக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்.

மாணவர்கள் பயணம் செய்து வரும் படகில் குறைந்தது 30 பேர் வரைதான் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். ஆனால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள், மாணவர்கள் கல்வி பயில, உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்கிறார்கள். தினசரி புலிகட் ஏரியில் படகு மூலம் எட்டு கி.மீ பயணித்து பள்ளிக்கு வர ஒரு மணி நேரமாகிறது.

படகு சவாரி செய்து வரும் குழந்தைகள்

அவர்கள் வசிக்கும் கிராமத்திற்கு அருகில் பள்ளிகள் கிடையாது. அதிலும் இவ்வளவு ஆபத்தான முறையில் எந்த ஆசிரியர்களும் பயணம் செய்து கல்வி கற்றுக்கொடுக்க வரமாட்டார்கள். ஆனால் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவே தினமும் ஆபத்தான படகு சவாரியை மேற்கொள்கின்றனர்.

அதில் பயணிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அரசு மூலமாக கொடுக்கப்படவில்லை. முன்னதாக ஒரு முறை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இறக்கம் கிராமத்திற்கு ஆய்வு மேற்கொண்டபோது அவர் கொடுத்த லைஃப் ஜாக்கெட்டை தற்போது வரை அந்த குழந்தைகள் அணிந்துள்ளார்கள். அதிலும் சிலருக்குதான் லைஃப் ஜாக்கெட் உள்ளது. ஆனால் அதிலும் சில லைஃப் ஜாக்கெட்டும் கிழிந்து சேதமாகியுள்ளன.

சுண்ணாம்புகுளம் அரசுப் பள்ளி

மீனவ குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் என்பதால் அனைவருக்கும் நீச்சல் தெரியும். ஆனால் கரையோரம் சேறும், சகதியுமான பகுதி இருக்கிறது. அந்த இடத்தில் தவறி குழந்தைகள் விழுந்தால்கூட சேற்றில் சிக்கிக் கொள்வார்கள் என்று இறக்கம் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆகவே இவர்கள் கல்வி பயில்வதற்காக, அதிலும் தமிழ் வழிக்கல்வியையே இறக்கம் கிராமத்து மக்கள் தங்கள் குழந்தைகள் கற்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அந்த நோக்கத்தில்தான் குழந்தைகளை திருவள்ளூர் மாவட்டம் சுண்ணாம்புக்குளம் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

உயிரை பணயம் வைக்கும் படகு சவாரி!

சமீபத்தில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட விபத்துபோல், எங்களது குழந்தைகளுக்கு நடப்பதற்குள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். மேலும் எங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் தமிழ் வழி கற்கும் எங்கள் குழந்தைகளுக்கு இறக்கம் கிராமத்திலேயே பள்ளிக்கூடம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மட்டுமின்றி ஈடிவி பாரத்தும் கோரிக்கை வைக்கிறது.

Last Updated : Sep 17, 2019, 8:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details