இந்தியாவில் கோவிட்-19 பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும்போதும், கரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. மகாராஷ்டிராவுக்குப் பின் கோவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாக ஆந்திர பிரதேசம் உள்ளது.
குறிப்பாக, தற்போது ஆந்திராவில் நகர் பகுதிகளைவிட கிராமப்புறங்களிலேயே கரோனா வேகமாக பரவிவருகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், 52 விழுக்காட்டினர் நகர்புறங்களைச் சேர்ந்தவர்கள். அதேநேரம், ஆகஸ்ட் 23-29ஆம் தேதி வரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 48 விழுக்காட்டினர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, பிரகாசம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், நெல்லூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து நிலைமை மோசமாகிவருகின்றது. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் மட்டும் ஆந்திராவில், 597 பேர் கரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். அவ்வாறான உயிரிழிப்பு விகிதமும் நகர்புறங்களுடன் ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளது.