ஆன்லைன் ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு கேமிங் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால், இவை இளைஞர்களின் மனதில் ஆசைகளை விதைத்து தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக பலர் குற்றம் சாட்டி வந்தனர். ஆன்லைன் கேம்ப்ளிங்கால் பலர் சிறுகச் சிறுக சேமித்த பணத்தை வீணடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் இன்று (செப்.03) ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டமான ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க ஒப்புதல் பெறப்பட்டு, சட்டத்திருத்தம் கொண்டு வர அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்துப் பேசிய ஆந்திரா தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா, "இளைஞர்களின் நலனுக்காகவும், தவறான பாதையில் செல்வதைத் தடுக்கும் வகையிலும், ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டம், ரம்மி, போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளை அரசின் உத்தரவுகளை மீறி நடத்தினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் போட்டியாளர்கள் முதல்முறை பிடிபட்டால் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும். இரண்டாவது முறையும் அதே தவறைச் செய்தால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவோர் பிடிபட்டால் அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.