ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது.
இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி மே 30ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களை மட்டுமே பிடித்து மிக மோசமான தோல்வியைத் தழுவியதால் சந்திரபாபு நாயுடு தனது முதலமைச்சர் பதவியை இழந்தார்.
இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருக்கும் இ.எஸ்.எல். நரசிம்மனை ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரு மாநில முதலமைச்சர்களான ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர் ராவ் ஆகியேர் நேற்று சந்தித்துப் பேசினர்.
பின்னர் அவர் அளித்த இஃபதார் நோன்பு நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியின்போது இருவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்தபின் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டி மகிழ்ந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதில் இருந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இடையே கசப்பான உறவே இருந்துவந்தது.
தற்போது ஆந்திராவின் புதிய முதலமைச்சருடன் தெலங்கானா முதலமைச்சர் நெருங்கிப் பழகிவருவது இருமாநில உறவை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சந்திரசேகர ராவின் கட்சிக்கு எதிராக பெருவாரியான கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து அவரை வீழ்த்த வியூகம் அமைத்து போட்டியிட்டனர்.
இதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திரசேகர் ராவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அதேபோல், ஆந்திர மாநில தேர்தலில் ஜெகனுக்கு ஆதரவாக சந்திரசேகர் ராவ் நிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகள், வியூகங்கள் அமைத்துக் கொடுத்தார். இதனால், இருவருக்குள்ளும் நல்லுறவு மேம்பட்டு தற்போது வரை தொடர்கிறது. அதேபோல், அவர்களது கட்சித் தொண்டர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டுவருகின்றனர்.