மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐநா கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, சபையில் பேசிய போது புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி பேசினார். ஐநாவில் மோடி தமிழ் மொழியை எடுத்துரைத்தது பல தரப்பினராலும் வரவேற்கப்பட்டது. அது மட்டுமல்லாது இன்று நடைபெற்ற சென்னை, ஐஐடி பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி தமிழைப் போற்றுவோம், உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்று பேசினார்.
இந்நிலையில் மோடி ஐநாவில் தமிழில் பேசியதற்கு தொழிலதிபரும், மகேந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மகேந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "பள்ளிப் படிப்பை ஊட்டியில் தான் படித்தேன், அங்கு படிக்கும் போது தமிழ் கற்றிருக்க வேண்டும். ஆனால் உடன் படித்த என் பள்ளி நண்பர்கள் சில வார்த்தைகள் மட்டுமே தமிழில் கற்றுக் கொடுத்தார்கள். பிரதமர் மோடி ஐநா சபையில் தமிழ் மொழி பற்றியும், அது பழமையான மொழி என்றும் கூறினார். அதுவரை தமிழைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். இந்தியா முழுவதும் தமிழ் மொழியின் பெருமையைப் பரப்ப வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.