இந்தியா - சீனா எல்லையில் தொடர்ந்து பிரச்னை நிலவிவருகிறது. கடந்த மாதம் இந்திய எல்லைப் பகுதியில் ராணுவ அலுவலர்கள் மேற்கொண்டுவந்த கட்டமைப்புப் பணிகளின்போது, சீன ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்தது. இந்திய ராணுவத்தின் பணிகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய சீன வீரர்களால் பிரச்னை வெடித்தது.
அப்போது இருநாட்டு வீரர்களும் கட்டை, கம்பிகள் கொண்டு தாக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இருநாட்டு உயர் அலுவலர்களும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் காரணமாக பிரச்னை தணிந்ததாகத் தோற்றம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், இந்தியாவின் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு அருகே ஜூன் 15 இரவு பணியிலிருந்த ராணுவ அலுவலர் கர்னல் சந்தோஷ் பாபு உள்ளிட்ட இந்திய படைவீரர்களை சீன ராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் சந்தோஷ் பாபு திரும்பாததால், இந்திய ராணுவ வீரர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, சீன ராணுவத்தினர் அவரை அடித்து துன்புறுத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய வீரர்கள், சீன தரப்பினரிடம் கர்னல் சந்தோஷை விட்டுவிடக் கோரி நட்பு ரீதியான சைகைகளைக் காண்பித்தும் அவர்கள் அவரை விடமால் அடித்து கொன்றுள்ளனர்.
சைகை காட்டிய இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சில வீரர்களையும் கைது செய்து, அவர்களின் முகத்திற்கு நேர துப்பாக்கிகளைக் காட்டி, அவர்களையும் கொடூரமாகச் சித்ரவதை செய்துள்ளனர்.
இந்திய வீரர்களுக்கு எதிராக அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.