பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் நெல், காய்கறிகள், பழங்கள் மற்றும் நறுமணப் பொருள்கள் சாகுபடிகளுக்காக பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பூச்சிக்கொல்லிகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தடை செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தடை செய்யப்படவுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் பட்டியலில், மோனோகுரோடோபாஸ், குயினல்பாஸ், ஆக்ஸிஃப்ளூர்பென் உள்ளிட்ட மருந்துப் பொருள்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
மோனோகுரோடோபாஸ்:
கடுமையான விஷ பூச்சிக்கொல்லியான இதை விவசாயிகள் பரவலாக பயன்படுத்துகின்றனர். இந்த பூச்சிக்கொல்லி சந்தைக்கு வரும்போதே 'மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது' எனக் குறிக்கும் சிவப்பு லேபிளுடன் வருகிறது. இந்த மோனோகுரோடோபாஸின் நச்சு தன்மையால் பல்வேறு விவசாயிகள் உயிரிழந்தனர்.
இந்த பூச்சிக்கொல்லி பறவைகள், பலூட்டிகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை. பெரும்பாலான சந்தைகளில் விற்பனையாகும் காய்கறிகளில் இந்த மோனோகுரோடோபாஸின் தாக்கம் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இந்த பூச்சிக்கொல்லியை உற்பத்தி செய்பவர்கள், இதன் நச்சுத்தன்மை குறித்த முழுமையான தகவலை அரசிடம் வழங்குவதும் இல்லை.
மேலும், பூச்சிக்கொல்லி பயன்படுத்திய பிறகு நெல், கரும்பு, பருத்தி, தேங்காய், காபி உள்ளிட்டவற்றை எத்தனை நாள்களுக்குப் பிறகு அறுவடை செய்யவேண்டும் என்று தெளிவான விளக்கமும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை.
இதன் காரணமாக பூச்சிக்கொல்லி தெளித்த சில நாள்களிலேயே விவசாயிகள் அறுவடை செய்து அந்த பொருள்களை சந்தைக்கு அனுப்புகின்றனர். இதை சாப்பிடும் பொதுமக்களுக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இந்த அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துக்கு 112 நாடுகள் தடை விதித்துள்ளன.