தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தை நோக்கி அதிதீவிர புயலாக மாறும் ஆம்பன்!

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவரும் 'ஆம்பன்' புயல், நேற்று அதிதீவிரப் புயலாக மாறியது. இன்று (மே18) இந்தப் புயல் மேற்கு வங்கம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆம்பன்
Amphan

By

Published : May 18, 2020, 11:20 AM IST

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளதாவது:

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆம்பன் புயலானது, தற்போது அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. இது தற்போது தெற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தெற்கு, தென்கிழக்குத் திசையில் சுமார் 620 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே 680 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது மே 18 வரை ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்துசெல்லும். மே 19 மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே 150 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

தெற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் அடுத்த சில தினங்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இந்தப் புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

புயல் வலுவடைவதால் நிலப்பரப்பு காற்று ஈர்க்கப்படுகிறது. இதனால், வட தமிழ்நாட்டுப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணிவரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி, மதுரை, சேலம், திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

'ஆம்பன்' புயல் அதிதீவிரப் புயலாக மாறிய நிலையில், தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்கள் அனைத்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details