கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக, அதன் கோரப் பிடியில் சிக்கி டெல்லி திணறிவருகிறது. டெல்லியில் மட்டும் இதுவரை 36,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,214 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் படுக்கை வசதிகள் பற்றாக்குறையில் இருப்பதால் டெல்லி அரசு செய்வதறியாமல் தவித்துவருகிறது.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனையில் நாளை ஈடுபடவுள்ளார். உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், உள்துறைச் செயலர் அஜய் பல்லா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.