உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாட்டில் உள்ள அனைவரும் ஒரே மொழியைப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு அனைவரையும் ஒருங்கிணைக்கும் மொழியாக இந்தி உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி தினத்தன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்து மூலம், மத்திய அரசு இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயல்வது பட்டவர்த்தனமாக தெரிகிறது என எதிர்க்கட்சியினர் உட்பட பலர் கருத்து தெரிவித்தனர். மேலும், ட்விட்டரில் #StopHindiImposition, #தமிழ்வாழ்க போன்ற ஹேஷ்டேக்குகள் உலகளவிலும், இந்திய அளவிலும் ட்ரெண்டாகின. அதுமட்டுமின்றி திமுக தரப்பில் செப்டம்பர் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த சூழலில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து அமித் ஷா கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனவும், இந்தித் திணிக்கப்படாது என்பதையும் மத்திய அரசின் பிரதிநிதியாக தான் உறுதியளிக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அமித் ஷா கருத்துக்கு எதிராக திமுக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. திமுக எப்போதும் இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் என ஸ்டாலின் கூறினார். இதற்கிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தி குறித்த தன்னுடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனவும், தானும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்துதான் வந்திருக்கிறேன் எனவும் விளக்கமளித்தார்.