உத்தரப் பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கர சேவகர்களால் (ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள்) 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அச்சமயத்தில் அதனை முன்னிருந்து நடத்தியவர்கள் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி என குற்றம்சாட்டப்பட்டது. மசூதி இடிக்கப்பட்டது குறித்த வழக்கின் விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
ஜூலை 24ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அத்வானி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை முன்வைக்கவுள்ளார். இப்பரபரப்பான சூழலில், அத்வானியின் வீட்டிற்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, வழக்கு குறித்து அவரிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின்போது ராமர் கோயில் கட்டுமான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.