மத்திய ரிசர்வ் காவல் துறை படையின் (சிஆர்பிஎஃப்) சிறப்புப் பிரிவான அதிரடி விரைவு படை (RAF), 1992இல் அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் 10 பட்டாலியன்களுடன் தொடங்கப்பட்ட படையானது, 2018ஆம் ஆண்டில் மேலும் ஐந்து பட்டாலியன்கள் இணைக்கப்பட்டன.
இந்த அதிரடி விரைவு படையினர் கலவரங்கள் மற்றும் கலவரம் போன்ற சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்படை தொடங்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வீரர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பாராட்டுகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டரில், "RAF வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். சட்டம் ஒழுங்கு தொடர்பான சவால்களை கையாள்வதில் RAF தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது. பலமுறை மனிதாபிமானப் பணிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் அவர்கள் கொண்டிருந்த அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.