கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும், கட்சியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அதிருப்தியில் இருக்கும் சச்சின் பைலட்டின் ஆட்சி மற்றும் கட்சி பொறுப்புகளை காங்கிரஸ் மேலிடம் பறித்ததையடுத்து, இந்த மோதல் உச்சம் தொட்டது.
ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக் கலைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைத் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பைலட்டின் ஆதரவு சட்டப்பேரவை எம்.எல்.ஏக்கள் 18 பேரும் இது தொடர்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மாநிலத்தின் கட்சித் தலைமைகளை எந்தவொரு நேரடியான எதிர்வினையையும் முன்னெடுக்க வேண்டாம் என்று காங்கிரஸ் டெல்லி மேலிடம் கேட்டுக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
அதிருப்தியில் உள்ள சச்சின் பைலட்டுடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ப.சிதம்பரமும் நேரடி தொடர்பில் இருப்பதாக அறிய முடிகிறது. இருவரும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையிலான பிரச்னைகளைத் தீர்க்க முயற்சித்து வருகின்றனர். இருவருக்கும் இடையிலான பனிப்போரை முடித்து வைக்க கே.சி.வேணுகோபாலை காங்கிரஸ் நியமித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "ஆட்சியைக் கலைக்க முயன்றவர்கள் குறித்து எங்களிடம் ஆதாரம் உள்ளது. ஆதாரம் உள்ளவர்களை மட்டுமே நாங்கள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளோம். சச்சின் பைலட்டுக்காக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் இன்னும் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது. அவர் விரும்பினால் மீண்டும் திரும்பி வரலாம். மீண்டும் வரவேண்டுமென நாங்களும் விரும்புகிறோம்" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் பல மூத்தத் தலைவர்களும் பைலட்டின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, மீண்டும் கட்சிக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையே இதுதொடர்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் வழக்குத் தொடர்ந்தார். இதன் நீட்சியாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் மீது, சட்டப்பேரவைத் தலைவர் வரும் ஜூலை 21 மாலை வரை நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.