கடந்த சில நாட்களாகவே இந்திய எல்லைப்பகுதியில், சீனா தனது ராணுவ நடவடிக்கைகள் மூலம் சீண்டல் மேற்கொண்டு வருகிறது. இந்தியா - சீன எல்லைப் பகுதியான லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் (line of actual control) எனப்படும் எல்.ஏ.சியில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறலை மேற்கொள்ளும்.
முக்கிய எல்லைப் பகுதிகளான அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், லடாக் ஆகிய இடங்களில் சீன ராணுவத்தின் சீண்டல் நடைபெறும் நிலையில், கடந்த சில நாட்களாக எல்லைப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ராணுவ வீரர்களைக் குவித்து, தேவையற்ற சலசலப்பை சீனா ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ராணுவத் தளபதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் குறித்து ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திடம் மூத்த ராணுவ அதிகாரி பேசுகையில், 'இந்தக் கூட்டம் முன்னரே திட்டமிட்டிருந்த ஒன்று. இந்தக் கூட்டத்தில் நிர்வாகம், மனிதவளம், லாஜிஸ்டிக்ஸ் குறித்து விவாதிக்க இருந்தோம். தற்போது எல்லைப் பகுதியில் நிலவும் அசாதாரண நிகழ்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் ஆலோசிக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே, இந்த விவகாரத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, எல்லைப் பகுதியில் இந்திய தரப்பு ராணுவத்தினரைக் குவித்து, ராணுவ வாகனங்கள் மூலம் சீன நாட்டினர் பேரணி நடத்துகின்றனரா அல்லது ரோந்து நடத்துகின்றனரா எனவும் கூர்மையாகக் கண்காணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:இந்திய - சீன உரசல்: பின்னணியில் உள்ள 10 காரணிகள்