கர்நாடகாவில் காலியாகவுள்ள 17 சட்டப்போரவை தொகுதிகளுக்கு முதல்கட்டமாக 15 தொகுதிகளுக்கு நாளை (டிச.5) இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் ரானிபென்னாரு (Ranibennuru) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கே.பி. கோலிவாடா போட்டியிடுகிறார்.
இவருக்குச் சொந்தமான வீடு வாகீஸ் (Vageesh colony) காலனியில் உள்ளது. இங்கு நேற்றிரவு (டிச.3) 10 மணியளவில் ஐ.டி. அலுவலர்கள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக செய்திகள் ஊடகங்களில் வெளியானது.
இருப்பினும் இந்த தகவலை ஐ.டி. அலுவலர்கள் மறுத்துள்ளனர். இருப்பினும் இந்த சோதனையை தேர்தல் அலுவலர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் கோலிவாடா தனது வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் நோக்கத்தில் ரூ.10 கோடி மதிப்பில் மதுபானம் வாங்கி பதுங்கி வைத்துள்ளதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த சோதனையில் மதுபானம் உள்ளிட்ட எந்த பொருளையும் அலுவலர்களால் கைப்பற்ற முடியவில்லை. வெறுங்கையுடனே வெளியேறினர். காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் சோதனை நடந்த போது, அக்கட்சி தொண்டர்களுக்கும் அலுவலர்களுக்குமிடையே வார்த்தை மோதல் வெடித்தது. இதனால் அந்த நள்ளிரவில் பதற்றமான சூழல் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். இந்த சோதனைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.