இதுதொடர்பாக நடிகை அமீஷா படேல் வெளியிட்டுள்ள காணொலியில், எனக்கு சந்திர பிரகாஷ் மீது எந்தக் கோபமும் இல்லை. வரும் தேர்தலில் அவர் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அக்டோபர் 26ஆம் தேதி நடிகை அமீஷா வெளியிட்ட காணொலியில், "பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர் சந்திர பிரகாஷை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டபோது மோசமான அனுபவம் ஏற்பட்டது.
அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் என்னிடம் தவறாக நடந்துகொண்டனர். என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர்.
இதனால் அச்சமடைந்து நானும், என்னுடன் வந்தவர்களும் வேறு வழியில்லாமல் எதுவும் பேசாமல் அமைதியாக மும்பை வந்து சேர்ந்தோம். அங்கு ஹோட்டலில் வைத்து பயம் காரணமாக சாப்பிட முடியாமலும், தூங்க முடியாமலும் தவித்தேன்" என்றார்.
இதைத்தொடர்ந்து தனது கட்சியினரின் தவறான நடத்தைக்கு சந்திர பிரகாஷ், நடிகை அமீஷா படேலிடம் வருத்தம் தெரிவித்த நிலையில், தற்போது மற்றொரு காணொலியை வெளியிட்டு இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிகார் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. முதல்கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதையொட்டி அந்த மாநிலத்திலுள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓப்ரா என்ற தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் போட்டியிடுகிறார்.
இதையடுத்து சந்திர பிரகாஷுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக பாலிவுட் நடிகை அமீஷா படேல் பரப்புரையில் ஈடுபட்டபோது, அக்கட்சியின் ஆதரவாளர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து முதலில் வெளிப்படுத்தி தற்போது அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்.