காஷ்மீருக்கு வரும் அமர்நாத் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறைக்குக் கிடைத்த தகவலையடுத்து, அமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், காஷ்மீர் மாநிலத்தில் அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு-வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதாகக் காங்கிரசின் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி ஆகியோர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் தலைவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு (யாத்ரீகர்கள் வெளியேறப் பிறப்பித்த அறிவிப்பு) வெளியான பிறகு வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
மேலும், யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் குறித்து அரசுக்கு நம்பகமான இடத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும் காஷ்மீருக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதியே இத்தகைய அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகவும் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.