தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 9, 2020, 2:02 PM IST

Updated : Jun 9, 2020, 2:21 PM IST

ETV Bharat / bharat

உயிருக்கு உத்தரவாதம் இல்லை: உயர் நீதிமன்றத்தை நாடிய 2 வயது குழந்தை

டெல்லி : கரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை என்ற டெல்லி அரசின் அறிவிப்பு தன்னை ஆபத்தில் தள்ளும் வகையில் இருப்பதாகக் கூறி, இரண்டு வயது குழந்தை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Delhi HC
Delhi HC

தேசிய தலைநகர் டெல்லியில், கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே கரோனா பரிசோதனை என்ற டெல்லி அரசின் அறிவிப்பு, தன்னை ஆபத்தில் தள்ளும்வகையில் இருப்பதாகக் கூறி இரண்டு வயது குழந்தையின் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தச் சிறுவன், தனது தந்தை மூலம் தாக்கல்செய்த மனுவில், "தினசரி வேலைக்குச் சென்றுவருபவர்கள் இருக்கும் கூட்டுக் குடும்பத்தில் நான் வசிக்கிறேன். அவர்கள் தினமும் வெளியே சென்றுவருவதால், எளிதில் கரோனா தொற்றுக்கு நான் ஆளாகலாம்.

அறிகுறியற்றவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நிறுத்தப்படுவது, மருத்துவமனைகளில் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

அறிகுறி இல்லாதவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படாது என்ற டெல்லி அரசின் அறிவிப்பு இந்திய தேசிய மருந்து ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக உள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாநிலத்தில் கரோனா பரவலை மேலும் மோசமாக்கலாம்.

ஒருபுறம் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துவிட்டு, மறுபுறம் அறிகுறி இல்லாதவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட மாட்டாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது நேர் முரணாக உள்ளது.

அறிகுறிகள் அற்ற கரோனா நோயாளிகள் மூலம்தான் குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு எளிதில் இந்தத் தொற்று பரவுகிறது. எனவே, அவர்களை முறையாகத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். இல்லையென்றால் பெரும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு டெல்லி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல், பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை (நாளை) விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: காய்ச்சல், தொண்டை வலியால் அவதியுறும் கெஜ்ரிவால்

Last Updated : Jun 9, 2020, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details