டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை சச்சின் பைலட் சந்தித்து பேசினார். இது நடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தான் காங்கிரஸில் நிலவி வந்த, உட்கட்சி பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் சந்தீப் சிங் சுர்ஜேவாலா காணொலி மூலமாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், “எல்லாம் நன்மைக்கே.. அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் தங்களுக்கு ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, ராகுல் காந்தியின் பார்வை மற்றும் நம்பிக்கையின் காரணமாக இணைந்துள்ளனர்.
இதற்கு பின்னால் பிரியங்கா காந்தியின் உழைப்பும் உள்ளது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் காட்டிய முதிர்ச்சியும், சச்சின் பைலட்டின் உள்ளார்ந்த நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் இன்றி இது சாத்தியமில்லை” என்றார்.
இதையடுத்து அவரிடம் பைலட், கெலாட் இடையேயான பிரிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ரன்தீப், “ஆமாம். பரபரப்பான வார்த்தைகள் பேசப்பட்டன. நேற்றைய சந்திப்புடன் இது முடிந்துள்ளது. தற்போது இந்த அத்தியாயம் மூடப்பட்டுள்ளது” என்றார்.
எனினும் அவர் பாஜகவை குற்றஞ்சாட்டினார். அப்போது, “மக்கள் அவர்களை நிராகரித்த மாநிலங்களிலும், ஆட்சி அமைத்துள்ளனர். இதே நடைமுறையை ராஜஸ்தானிலும் முயற்சித்தனர். மூன்று எம்.எல்.ஏ.க்களை வாங்க முயற்சித்தனர்” என்றார்.
ராகுல் காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்று கொள்வாரா என்று கேள்விக்கு ரன்தீப் பதிலளிக்கையில், “இது தொடர்பாக நான் அவரிடம் சமீபத்தில் பேசவில்லை. தேர்தல் தோல்வியை கருத்தில் கொண்டு, தார்மீக அடிப்படையில் அவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் எதிர்காலத்தில் நடப்பது குறித்து கருத்து தெரிவிக்க தேவையில்லை” என்றார்.
இதையும் படிங்க:புதிய கல்விக் கொள்கையில் அடிப்படை இலக்கு இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!