தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமாவிற்கு காரணம் இதுதான்... ஷிரோமணி அகாலி தளம் தலைவர் சிறப்பு பேட்டி! - மத்திய அரசு

டெல்லி: ஆட்சி, அதிகாரம், கூட்டணியைவிட கொள்கையும், மக்கள் நலனும் தான் எங்களுக்கு மிக முக்கியம் என ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கருத்து தெரிவித்துள்ளார்.

கூட்டணியைவிட மக்களின் நலனே எங்களுக்கு பெரிது - ஷிரோமணி அகாலி தளம்
கூட்டணியைவிட மக்களின் நலனே எங்களுக்கு பெரிது - ஷிரோமணி அகாலி தளம்

By

Published : Sep 19, 2020, 5:06 AM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே (செப்டம்பர் 14) மக்களவையில் 8 சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக, அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆச்சரியப்படத்தக்க வகையில், விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஷிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலிடம் நமது ஈ டிவி பாரத் பிரத்யேகமாக பேட்டி கண்டது.

அப்போது பேசிய அவர், "ஷிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி 1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப் பழமையான, நெருக்கமான கூட்டணி கட்சி எங்களது கட்சியாகும். பஞ்சாபில் இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை ஒன்றிணைப்பதில் இது முக்கிய பங்கு வகித்தது.

பாஜக - ஷிரோமணி அகாலிதளம் கூட்டணி பஞ்சாபிற்கும், அதன் வளர்ச்சிக்கும் முக்கியமானதாக கருதியே அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசின் சில முடிவுகள் எங்களின் கொள்கைக்கே எதிராக உள்ளது. நாங்கள் விவசாயிகளுக்காக நிற்கிறோம். விவசாயிகளோடு நிற்கிறோம். எங்கள் கோரிக்கைகளை அவர்கள் கவனிக்காதபோது, நாங்கள் ஏன் அமைச்சரவையில் தொடர வேண்டும்.

விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 4 சட்ட முன்வடிவுகளையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அவற்றில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தினோம்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர தோமர், எனக்கு எம்.எஸ்.பி குறித்து ஒரு உறுதியளித்திருந்தார்.

நாங்கள் அக்கடிதத்தை விவசாயிகளுக்கு, விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு அதனை காட்டி சமாதானம் செய்திருந்தோம்.

ஆனால், விவசாயிகள் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தில் திருப்தி அடையவில்லை. அதேபோல், இறுதியில் மத்திய அரசும் விவசாயிகளின் திருத்தங்களை ஏற்கவில்லை.

எனவே நாங்கள் வெளியேற முடிவு செய்தோம். சட்ட முன்வடிவின் இறுதி வரைவுக்கு முன்னர் அவர்கள் எங்களோடு கலந்தாலோசிக்கவில்லை.

ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமா குறித்து பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் கூறியதை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

கேப்டன் அமரீந்தரிடமிருந்து எங்களுக்கு எந்தவொரு சான்றிதழும் தேவையில்லை. விவசாயிகளுக்காக எந்த தியாகத்தை செய்யவும் ஷிரோமணி அகாலி தளம் தயாராக உள்ளது. சிறைக்குச் செல்வதோ அல்லது கூட்டணியை முறிப்பதோ அதை பற்றிய முக்கிய முடிவை கட்சியின் தலைமைக் குழு முடிவு செய்யும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details