கடந்த 2019ஆம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மருத்துவர் கஃபில் கான் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதையடுத்து, கான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, கானை விடுவிக்கக் கோரி அவரின் தாயார் பர்வீன், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, தீபக் வர்மா ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று (செப். 1) நடைபெற்ற விசாரணையில், கஃபில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசவில்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்து அவருக்கு பிணை வழங்கியது.