உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே இன்று பதவியேற்றார். வழக்கறிஞராக பணியைத் தொடங்கி இன்று இந்திய நாட்டின் முதன்மை நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வாகியிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ரஞ்சன் கோகோய்யின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் எஸ்.ஏ. பாப்டே தலைமை நீதிபதியாக தனது பணியைத் தொடங்குகிறார்.
63 வயதாகும் பாப்டே, ஏப்ரல் 2021 வரை தலைமை நீதிபதியாக தனது பணியைத் தொடர்வார்.
வாழ்க்கைப் பயணம்
- மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 1956 ஏப்ரல் 24ஆம் தேதி பிறந்தார். மூத்த வழக்கறிஞராக இருந்த அரவிந்த் பாப்டேவின் மகனாக பிறந்தவர்.
- நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து 1978ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் உறுப்பினராக இணைந்தார்.
- 1998ஆம் ஆண்டு வரை வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த பாப்டே 2000ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், தொடர்ந்து 2012ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
முக்கிய தீர்ப்புகள் - விசாரணை
- நீண்ட நாட்களாக நடந்து வந்த ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அமர்வில் ஒரு மூத்த நீதிபதியாக இருந்து சமீபத்தில் தீர்ப்பு அளித்திருக்கிறார்.
- தற்போது ஓய்வு பெற்றிருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான, நீதிமன்ற ஊழியரின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளார்.
- 3 நீதிபதிகள் அமர்வில் இருந்த போது ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க: போருக்கு ரெடியான ரஜினியின் அதிசய பேச்சு