அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்! - தனியார்மயமாக்கல்
புதுச்சேரி: பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரியில் ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியூசி அரசு ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று (ஆக.20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியுசி நிர்வாகிகள் தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ராணுவ ஆயுதங்கள், கருவிகளை உற்பத்தி செய்கிற, இந்திய அரசுக்கு சொந்தமான 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை, தனியாரிடம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ரயில்வே உற்பத்தி பிரிவுகளையும், 109 ரயில் போக்குவரத்து தடங்களை தனியாரிடம் ஒப்படைப்பதையும் ரத்து செய்ய வலியுறுத்தியும், மாநிலப் போக்குவரத்து, எல்ஐசி, வங்கிகள், நிலக்கரி, பிபிசிஎல், ஏர் இந்தியா, விமான நிலையங்கள், தொலைத்தொடர்பு, துறைமுகங்கள் மற்றும் உள்ளாட்சி பணிகளை தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சியை கைவிட கோரி வலியுறுத்தினர்.